நாகர்கோவில்: தனியார் மருத்துவமனைகளை நாடுவோர் அதிகரித்துள்ள நிலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மகப்பேறு மற்றும் பிரசவ சிகிச்சைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. குமரி மாவட்டத்தில் 11 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் உட்பட 47 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இவற்றில் குறைந்தபட்சம் ஒரு மருத்துவர், இரண்டு செவிலியர், மருத்துவ பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 24 மணி நேரமும் மகப்பேறு மற்றும் விபத்து சிகிச்சை வழங்குவதற்கான வசதிகளும் சில ஆரம்ப சுகாதார நிலையங்களில் இடம்பெற்றுள்ளது. மாவட்டத்தில் ஆசாரிபள்ளத்தில் கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, தக்கலையில் பத்மநாபபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, 5 தாலுகா மருத்துவமனைகள், தாலுகா அல்லாத மருத்துவமனைகள் 3, மற்றும் தனியார் மருத்துவமனைகள் பல உள்ளன.
கிராமப்புறங்களில் இருந்து பிரசவ காலங்களில் கர்ப்பிணிகளை தலைமை மருத்துவமனைகள், மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்லும்போது காலதாமதம் காரணமாக பல்வேறு சிக்கல்கள் அவர்களுக்கு ஏற்படுகிறது. இதனை தவிர்க்க அருகேயுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவங்களை அதிகரிக்க செய்ய வேண்டும் என்று சுகாதாரத்துறை சார்பில் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சைக்கு வருகின்ற கர்ப்பிணிகளுக்கும், உதவியாளர்களுக்கு உணவு, படுக்கை வசதிகள் போன்றவை ஏற்படுத்தி கொடுக்கப்படுகிறது. சுகப்பிரசவங்களை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பார்க்க வாய்ப்புகள் இருந்தும் தனியார் மருத்துவமனைகளை நாடுவோர் மாவட்டத்தில் அதிகரித்து வருகின்றனர். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொடக்க நிலை பிரசவங்கள் மட்டுமே பார்க்கப்படுகிறது, அறுவை சிகிச்சை நிலையில் உள்ளவர்களை மேல் சிகிச்சைக்காக மாவட்ட தலைமை மருத்துவமனை அல்லது அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கின்றனர். அதே வேளையில் அரசு மருத்துவமனைக்கு இணையாக ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவம் பார்த்தலும் குமரி மாவட்டத்தில் நடைபெறுகிறது. அந்த வகையில் குமரி மாவட்டத்தில் இடைக்கோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 4 மாதங்களில் 108 பிரசவங்கள் நடைபெற்றுள்ளன என்று சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக அவர்கள் மேலும் கூறுகையில், ‘மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான 4 மாதங்களில் மொத்தம் 244 பிரசவங்கள் நடைபெற்றுள்ளது. இதில் 108 பிரசவங்கள் இடைக்கோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றுள்ளது. பொதுவாக 33 சதவீதம் பிரசவங்களே இங்கு tஅரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடைபெறுகிறது. 67 சதவீதத்திற்கும் மேலான பிரசவங்கள் தனியார் மருத்துவமனைகளில் நடைபெறுகிறது. தனியார் மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு இருக்கின்ற ஈர்ப்பு இதற்கு காரணம் ஆகும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் சுகபிரசவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது’ இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இடைக்கோடு நம்பர் 1;
குமரி மாவட்டத்தில் இடைக்கோடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மட்டும் அதிக அளவு பிரசவங்கள் நடைபெற்றுள்ளது. அங்கு மகப்பேறு பணியில் இருந்த மருத்துவர் ஒருவரின் சிறப்பான செயல்பாடுகளே இதற்கு காரணமாக கருதப்படுகிறது. இங்கு கடந்த ஏப்ரல் மாதத்தில் 32 பிரசவங்களும், மே மாதத்தில் 29, ஜூனில் 23, ஜூலையில் 24 பிரசவங்களும் என்று 4 மாதங்களில் 108 பிரசவங்கள் நடந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக இந்த 4 மாத காலங்களில் அகஸ்தீஸ்வரத்தில், சிங்களேயர்புரியில் 13, அழகப்பபுரத்தில் 12 பிரசவங்களும் நடந்துள்ளது. பிற அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் குறைவான பிரசவங்களே நடைபெற்றுள்ளது. மாவட்டத்தில் 47 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சேர்த்து ஏப்ரல் மாதம் 72, மே மாதம் 77, ஜூனில் 44, ஜூலையில் 51 பிரசவங்களும் நடைபெற்றுள்ளன. மொத்த எண்ணிக்கை 244 ஆகும்.
6273 குழந்தைகள் பிறப்பு;
குமரி மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான 4 மாத காலத்தில் 6273 குழந்தைகள் பிறந்துள்ளனர். இதில் 44 சிசுக்கள் மரணமடைந்துள்ளனர். இறப்பு விகிதம் 7.01 ஆகும். அதிகபட்சமாக தக்கலை வட்டாரத்தில் 10 சிசுக்கள் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. முன்சிறை-1, ராஜாக்கமங்கலம் -1 என்று இரு தாய்மார்கள் பிரசவ காலத்தில் உயிரிழந்துள்ளனர்.
வழங்கப்படும் சிகிச்சைகள்;
* அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தாய் சேய் நல சேவைகள், கர்ப்ப கால சேவைகள், ஸ்கேன் பரிசோதனை, கர்ப்பிணித் தாய்மார்களுக்கான சர்க்கரை அளவு பரிசோதனை, இருப்புச் சத்து குறைபாடு கண்டறிதல், தாய் சேய் இருவருக்குமான தடுப்பூசிப் பணிகள், 24X7 மணி நேர கர்ப்ப கால சேவைகள், இரத்தம் தேவைப்படும் கர்ப்பிணிகளுக்கு இரத்தம் ஏற்றுதல், உயர் சிகிச்சைக்கான பரிந்துரைகள் போன்ற அடிப்படை சேவைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
* வெளி நோயாளிகளுக்கான சிகிச்சை, உள் நோயாளிகளுக்கான சிகிச்சை அதிக கவனம் தேவைப்படும் கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை மற்றும் உயர் மருத்துவ நிலையங்களுக்கு பரிந்துரை. அவசர கால ஊர்தி மற்றும் 108, 104 போன்ற சேவைகள் 24 மணிநேரமும் வழங்கப்படுகின்றன. தொற்றும் நோய்களுக்கான சிகிச்சைகள் டெங்கு, சிக்குன்குன்யா போன்ற காய்ச்சல் நோய்கள் மற்றும் வயிற்றுப்போக்கு, தட்டம்மை, அம்மை, நாய்கடி, பாம்புகடி உள்ளிட்ட விஷகடிகளுக்கான சிகிச்சைகள் மற்றும் நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
* தொற்றா நோய்களுக்கான சிகிச்சைகளாக 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும், நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்த வியாதிகளுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 30 வயதிற்கு மேற்பட்ட அனைத்து மகளிர்க்கும் கருப்பை வாய் புற்றுநோய் மற்றும் மார்பக புற்றுநோய்களுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, தேவைப்படுபவர்களுக்கு உயர் மருத்துவ நிலையங்களுக்கு பரிந்துரை செய்யப்படுகிறது.