*தனியார் கேண்டீனில் இருந்த 10 கிலோ அழுகிய காய்கறிகள் அழிப்பு
நாகர்கோவில் : குமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள அம்மா உணவகம் மற்றும் நோயாளிகள், மாணவ, மாணவிகளுக்கான உணவு தயாரிக்கும் சமையல் கூடம் ஆகியவற்றில் உணவு பாதுகாப்பு துறையினர் நேற்று திடீரென சோதனை செய்தனர். அங்கிருந்த தனியார் கேண்டீனில் இருந்து 10 கிலோ அழுகிய காய்கறிகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.
நாகர்கோவில் மாநகர உணவு பாதுகாப்பு அலுவலராக இருந்த குமார் பாண்டியன், கோவைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதில், தக்கலையில் உணவு பாதுகாப்பு அலுவலராக இருந்த பிரவீன் ரகு, மாநகர உணவு பாதுகாப்பு அலுவலராக நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் நேற்று காலை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு நடந்தது. மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்தில் நேற்று காலை ஆய்வு செய்தனர்.
அப்போது சமையல் கூடம், பொருட்கள் இருப்பு வைக்கும் அறை உள்ளிட்டவற்றை பார்வையிட்டனர். சமைத்து விநியோகம் செய்ய தயாராக இருந்த உணவின் தரத்தையும் பரிசோதனை செய்தனர். உணவு சமைக்கும் போதும், விநியோகம் செய்யும் போதும் ஊழியர்கள் அனைவரும் முறையான கையுறை, தலையுறை அணிந்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். பாத்திரங்கள் சுத்தமாக கழுவப்பட வேண்டும். உணவு சமைத்து முடித்த பின், முறையாக மூடி வைத்திருக்க வேண்டும் என்றனர்.
பின்னர் அங்கிருந்த தனியார் கேண்டீனில், ஆய்வு நடந்தது. அங்கு பயன்பாட்டுக்கு இருந்த காய்கறிகள், பொருள்களை சோதனை செய்தனர். இதில் காய்கறிகள் சில பயன்பாட்டுக்கு உகந்தவை அல்ல என்பது தெரிய வந்து அவற்றை பறிமுதல் செய்து அழிக்க உத்தரவிட்டனர். மொத்தம் 10 கிலோ அழுகிய நிலையில் இருந்த காய்கறிகள் அழிக்கப்பட்டன. மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர்.
மருத்துவக்கல்லூரியில் உள்ள டாக்டர்கள், பணியாளர்களுக்கான கேண்டீனிலும் சோதனை செய்தனர். மாணவ, மாணவிகளின் விடுதிகளில் ஒவ்வொரு நாளும் தயாரிக்கும் உணவுகளில் இருந்து சுமார் 300 கிராம் மாதிரி பரிசோதனைக்காக எடுத்து வைக்கப்பட வேண்டும் என்று கூறினர். இதை நாள் தோறும் உணவு பாதுகாப்பு துறையிடம் ஒப்படைத்து பரிசோதனை செய்யப்படும் என்றும் தெரிவித்தனர். இதே போல் அங்கன்வாடி, பள்ளிகள், அரசு விடுதிகளில் சமைக்கும் உணவுகள் கண்டிப்பாக பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பது அரசு விதிமுறை ஆகும் என்று உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் கூறினர்.
நோயாளிகளுக்கு உணவு தயாரிக்கும் சமையல் கூடம் ஆய்வு
இதே போல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு தயாரிக்கும் சமையல் கூடத்தை சென்று பார்வையிட்டனர். அங்கிருந்த காய்கறிகள், பலசரக்கு பொருட்கள் மற்றும் சமைத்து வைக்கப்பட்டு இருந்த உணவு வகைகளை ஆய்வு செய்தனர். தொடர்ந்து மாணவர்கள் தங்கும் விடுதியில் உள்ள சமையல் கூடத்துக்கு சென்று பார்வையிட்டனர். அங்கு சில குறைபாடுகளை நிவர்த்தி செய்ய அறிவுறுத்தி உள்ளனர்.