நாகர்கோவில் : தீபாவளி பண்டிகையையொட்டி பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் கடை வீதிகளில் அதிகமாக உள்ளதால், போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி பண்டிகை வருகிற 12ம்தேதி (ஞாயிறு) கொண்டாடப்படுகிறது. இன்னும் 5 நாட்களே இருப்பதால், தீபாவளிக்கான ஏற்பாடுகள் மும்முரமாக தொடங்கி உள்ளன. ஜவுளிகள் மற்றும் பொருட்கள் வாங்க கடை வீதிகளில் மக்கள் குவிந்து வருகிறார்கள். குமரி மாவட்டத்திலும் தீபாவளி விற்பனை களை கட்டி உள்ளது.
நாகர்கோவிலில் செம்மாங்குடி ரோடு, கலெக்டர் அலுவலக சந்திப்பு, மீனாட்சிபுரம், செட்டிகுளம், கோர்ட் ரோடு, எஸ்.பி. அலுவலக ரோடு, வேப்பமூடு உள்பட நகரின் முக்கிய பகுதிகளில் உள்ள ஜவுளி கடைகள், வர்த்தக நிறுவனங்களில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. குடும்பம், குடும்பமாக வந்து ஜவுளிகள் வாங்கி வருகிறார்கள். நேற்று (ஞாயிறு) விடுமுறை என்பதால் கடை வீதிகளில் காலையிலேயே மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. நாகர்கோவில் மட்டுமின்றி மார்த்தாண்டம், தக்கலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஜவுளி கடைகளிலும் மக்கள் கூட்டம் இருந்தது.
பட்டாசு கடைகளிலும் மக்கள் கூட்டத்தை காண முடிந்தது. தீபாவளியையொட்டி மாவட்டம் முழுவதும் 100 பட்டாசு கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இன்னும் 5 நாட்களே இருப்பதால் பட்டாசுகள் வரத்து அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு பல்வேறு விதமான புதிய ரக பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளன. தற்போது உலக கோப்பை கிரிக்கெட் நடைபெற்று வருவதால் அதை நினைவுப்படுத்தும் வகையிலான பட்டாசுகளும் விற்பனைக்கு வந்து இருக்கின்றன. பட்டாசுகள் விற்பனைக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கின்றன. அனுமதியின்றி பட்டாசுகள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். குமரி மாவட்டம் முழுவதும் பட்டாசு கடைகளை கண்காணிக்க 8 குழுக்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.
தீபாவளியையொட்டி பொருட்கள் வாங்க அதிகளவில் மக்கள் கடை வீதிகளுக்கு வருவார்கள் என்பதால் திருட்டு உள்ளிட்ட சம்பவங்களை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே செயின் பறிப்பு சம்பவங்களை தடுக்க 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது தனிப்படைகளின் எண்ணிக்கை 15 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. முக்கிய சந்திப்புகள், பஸ் நிலையங்கள், கடை வீதிகளில் போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.
பஸ்களில் பயணிக்கும் பெண்கள், வயதானவர்கள் தங்களது நகை மற்றும் உடமைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என காவல்துறையினர் கேட்டுக் கொண்டு உள்ளனர். கூட்ட நெரிசலில் முண்டியடித்து ஏற வேண்டாம் என காவல்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். பெண் போலீசார் மப்டி உடையில் கண்காணித்து வருகிறார்கள்.
பெண்கள் அதிரடிப்படை போலீசார் இரு சக்கர வாகனங்களில் ரோந்து பணியில் ஈடுபட எஸ்.பி. சுந்தரவதனம் உத்தரவிட்டுள்ளார். வங்கிகளில் இருந்து பணம் எடுத்து வருபவர்கள், கவனமாக இருக்க வேண்டும் என்றும் காவல் துறையினர் அறிவுரை வழங்கி உள்ளனர். நாகர்கோவில் மீனாட்சிபுரம் பஸ் நிலையத்தில் ஒலி பெருக்கி மூலம் பயணிகளுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டு வருகிறது.