நாகர்கோவில் : ஊரக வளர்ச்சி துறையில் காலியாக உள்ள ஊராட்சி செயலாளர் பணியிடங்கள் உள்ளிட்ட அனைத்து நிலை காலி பணியிடங்களையும் உடனே நிரப்ப வேண்டும். ஊராட்சி செயலாளர்களுக்கு சிறப்பு நிலை, தேர்வு நிலை வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் உள்ளிட்ட விடுபட்ட அனைத்து உரிமைகளும் வழங்க வேண்டும்.தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு தனி ஊழியர் கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும்.
கலைஞர் கனவு இல்லம் மற்றும் ஊரக வீடுகள் பழுது நீக்குதல் உள்ளிட்ட அனைத்து வீடுகள் கட்டும் திட்டங்களுக்கும் உரிய பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் 2 நாள் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு போராட்டம் நேற்று முன் தினம் (22ம்தேதி) தொடங்கியது. நேற்று 2 வது நாளாக போராட்டம் நடந்தது. குமரி மாவட்டத்திலும் 2 வது நாள் போராட்டம் காரணமாக, குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள குமரி மாவட்ட வளர்ச்சி பிரிவு, ஊராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலகம், 9 வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், ஊராட்சி அலுவலகங்களில் வளர்ச்சி பிரிவு ஊழியர்கள் பணிக்கு வர வில்லை.
இதனால் அலுவலகங்கள் வெறிச்சோடி கிடந்தன. மாவட்டம் முழுவதும் 400க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஊரக வளர்ச்சி துறையில் பணியாற்றுகின்ற நிலையில் 300க்கும் மேற்பட்டவர்கள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் பங்கேற்றதாக அதன் நிர்வாகிகள் கூறி உள்ளனர். இதில் கலெக்டர் அலுவலகத்தில் மட்டுமே ஊரக வளர்ச்சி துறை சார்பில் 220 பேர் வரை பணிக்கு வர வில்லை என்றும், இந்த போராட்டம் காரணமாக ஊரக பகுதிகளில் அரசின் திட்ட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இரு நாட்களாக தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணிகளும் முடங்கியதாக சங்க பொறுப்பாளர்கள் கூறினர்.