* சட்டசபை அறிவிப்பை செயல்படுத்த கோரிக்கை
நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் மண் கிடைப்பதில் சிக்கல் உள்ளதால் செங்கல்சூளை, மண்பாண்ட தொழில்கள் முடங்கி உள்ளன. சட்டமன்ற அறிவிப்பை மாவட்ட நிர்வாகம் செயல்படுத்த வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குமரி மாவட்டத்தில் விவசாயத்துக்கு அடுத்த படியாக செங்கல் சூளை மற்றும் மண்பாண்ட தொழில்கள் பிரதானமாக உள்ளன.
குமரி மாவட்டத்தில் தயாரிக்கப்படும் மண்பானைகள் வெளிநாடுகளுக்கும் அதிகளவில் கொண்டு செல்லப்படுகின்றன. கூட்டுறவு சங்கங்களும் இயங்கி வருகின்றன. மாவட்டத்தில் சுங்கான்கடை, தேரூர் உள்ளிட்ட பகுதிகளில் மண்பானை தொழிலாளர்கள் உள்ளனர். இதே போல் ஆரல்வாய்மொழி, தோவாளை, கொட்டாரம், குமரன்புதூர் உள்ளிட்ட இடங்களில் விவசாயமும், செங்கல்சூளை தொழிலும் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. குறிப்பாக அகஸ்தீஸ்வரம், தோவாளை தாலுகாக்களில் 500க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இருந்து வருகின்றன.
இந்த தொழில்கள் மூலம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பெற்று வருகிறார்கள். விவசாய நிலத்தில் உள்ள பயனற்ற மண்ணை எடுத்து செங்கல் தயாரிக்கும் தொழிலுக்கும், மண்பானை தொழிலுக்கும் பயன்படுத்தி வந்தனர். மலட்டுத்தன்மையுள்ள மண் அப்புறப்படுத்தப்பட்டதால் விவசாயமும் தடையின்றி நடக்கும் என்பதால், அவ்வப்போது மலட்டு தன்மை கொண்ட மண்ணை எடுக்க விவசாயிகள், செங்கல் சூளை தொழிலாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படும். இதன் மூலம் செங்கல்சூளை தொழில்கள் குமரி மாவட்டத்தில் பிரதான தொழிலாக மாறியது. வட மாநிலங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் குமரி மாவட்ட பகுதிகளில் குடியேறி, செங்கல் சூளைகளில் பணியாற்றி வந்தனர்.
இந்நிலையில் மண் எடுப்பதில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு தடைகள் ஏற்பட்டதன் காரணமாக மூலப்பொருள் பற்றாக்குறையால் ஏராளமான செங்கல் சூளைகள் மூடப்பட்டன. இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதின் அடிப்படையில் விவசாயிகள் மற்றும் செங்கல் சூளை தொழிலாளர்களின் வாழ்வாதாரம் காக்க வேண்டி தமிழ்நாடு சிறு கனிம விதி 1959 எண் 44 கீழ் பட்டா நிலங்களில் மண் எடுத்து விவசாயம் மற்றும் செங்கல் சூளைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அரசு அனுமதி வழங்கியது. அதன் பிறகும் குமரி மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தாமல் செங்கல் சூளைக்கு மண் எடுக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது.
இதனால் செங்கல் சூளை தொழிலாளர்கள், மண்பாண்ட தொழிலாளர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். ஏற்கனவே இந்த பிரச்சினை தொடர்பாக கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் தளவாய்சுந்தரம், சட்டமன்றத்தில் இந்த பிரச்சினையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு சென்றார். அப்போது பேசிய அமைச்சர் துரைமுருகன், விவசாயிகளுக்கும், மண்பாண்ட தொழிலாளர்களுக்கும் மண் எடுக்க எந்த வித தடையும் இந்த அரசு விதிப்பதில்லை. செங்கல் சூளைக்கான மண்ணை பிரிவு 44 ன் கீழ் சட்டவிதிகள் என்ன சொல்கிறதோ? அதை அடிப்படையாக வைத்து எடுத்துக் கொள்ளலாம்.
பட்டா நிலங்களில் வழங்கப்படும் செங்கல் சூளை உரிமங்களுக்காக மண் எடுக்க உரிமை வழங்கப்பட்டுள்ளது. உரிய உரிம கட்டணம் செலுத்தி மண்ணை எடுத்து செங்கல் சூளை பணிக்கு பயன்படுத்தி கொள்ளலாம் என்று அமைச்சர் துரைமுருகன் சட்டசபையில் அறிவித்தார்.இந்த அறிவிப்புக்கு பின் பேசிய தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. இந்த அறிவிப்பால், குமரி மாவட்டத்தில் மண்பாண்ட தொழில், செங்கல் சூளை தொழிலுக்கு மண் எடுக்க எந்த வித தடையும் இல்லாத வகையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
ஆனாலும் குமரி மாவட்ட கனிம வளத்துறை இந்த விவகாரத்தில் இன்னும் நடவடிக்கை எடுக்க வில்லை. சட்டமன்றத்தில் அறிவித்து பல மாதங்கள் கடந்த பின்னரும், இன்னும் அனுமதி இல்லாததால் மண் எடுக்க முடியாமல் செங்கல்சூளை மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் திணறி வருகிறார்கள்.
குமரி மாவட்டத்தில் செங்கல் தட்டுப்பாடு ஏற்பட்டு விலையும் அதிகரித்துள்ளது. அனுமதி இல்லாமல் மண் எடுத்ததாக கூறி 3 செங்கல் சூளைகளும் சமீபத்தில் மூடப்பட்டன. குமரி மாவட்ட கனிம வளத்துறை அலுவலகத்தில் உள்ள சிலர், வேண்டுமென்றே இந்த பிரச்னையை இழுத்தடிப்பு செய்கிறார்கள். கலெக்டருக்கு தவறான தகவலை தெரிவித்து, அனுமதி அளிப்பதை தடுத்து வருவதாக கூறப்படுகிறது.
இதனால் வாழ்வாதாரம் இழந்துள்ள தொழிலாளர்கள், தமிழ்நாடு அரசின் கவனத்துக்கு இந்த பிரச்சினையை கொண்டு செல்லும் வகையில் அமைச்சர் துரைமுருகனை சந்திக்க உள்ளதாக கூறி உள்ளனர். குமரி மாவட்ட கலெக்டர் தர், இந்த விவகாரத்தில் உரிய கவனம் செலுத்தி, சட்டமன்றத்தில் அமைச்சர் அறிவித்த அறிவிப்பை முறைப்படி செயல்படுத்த வேண்டும் என கூறி உள்ளனர்.