*ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் ஏற்ற மறுப்பு
நாகர்கோவில் : தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் சுமை தூக்கும் பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு மருத்துவ காப்பீடு ஏற்படுத்தி தர வேண்டும். சங்க அங்கீகாரத் தேர்தல் நடத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
தமிழ்நாடு முழுவதும் வருகை பதிவேட்டில் பெயர் சேர்க்காமல் உள்ள சுமார் 524 தொழிலாளர்களின் பெயர்களை வருகை பதிவேட்டில் சேர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக சுமை தூக்கும் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் நேற்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடந்தது.
குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் கோணத்தில் நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் குடோன் 1, குடோன் 2, காப்புக்காட்டில் குடோன் 1, குடோன் 2 மற்றும் உடையார் விளை, ஆரல்வாய்மொழியில் தலா ஒரு குடோன்கள் என 6 குடோன்கள் உள்ளன.
இந்த 6 குடோன்களிலும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று (வெள்ளி) வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால் ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் ஏற்றி கொண்டு செல்லப்படாமல் லாரிகள், குடோன்களுக்கு வெளியே நின்றன. சங்க தலைவர் மணிகண்டன், செயலாளர் ஜெயின்ராஜ், பொருளாளர் மணிகண்டன் மற்றும் நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
மேற்கண்ட 6 குடோன்களில் இருந்து தான் மாவட்டம் முழுவதும் அமைந்துள்ள சுமார் 500க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் அனுப்பி வைக்கப்படும். மாத கடைசி என்பதால் அடுத்த மாத பொருள் விநியோகத்திற்கு தேவையான ரேஷன் பொருட்கள் கொண்டு செல்லப்பட வேண்டும். இந்த நிலையில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் நேற்று நடத்திய வேலை நிறுத்த போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து சங்க நிர்வாகிகள் கூறுகையில், எங்களது கோரிக்கைகள் தொடர்பாக ஏற்கனவே பல கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று இருக்கிறது.
பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட உடன்பாட்டின் படி எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட வில்லை. எனவே தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடைபெறுகிறது. 28ம்தேதி (இன்று) முதல் தொடர்ந்து நிதான வேலை செய்யும் போராட்டம் நடத்த உள்ளோம்.
வரும் 4.7.2025 அன்று தொழிலாளர் ஆணையர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டமும், 10.7.2025 முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டம், குடும்ப அட்டை ஒப்படைப்பு போராட்டம் உள்ளிட்டவை நடக்கும் என்றனர்.