*தாசில்தார் முன்னிலையில் இன்று பேச்சுவார்த்தை
குமாரபாளையம் : குமாரபாளையம் அருகே இறந்தவர்களின் நினைவாக நடுகல் நடுவதில் இருதரப்பினருக்கும் பிரச்னை ஏற்பட்டதால், இன்று மதியம் வட்டாச்சியர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வீரப்பம்பாளையம் மேல்வலவு பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். குடும்ப உறுப்பினர்களில் யாராவது இறந்து போனால், அவர்களின் நினைவாக நடுகல் நட்டு வழிபாடு செய்வது வழக்கம். இங்குள்ள ஓடையோரமுள்ள விவசாய நிலத்தில் பல காலமாக நடுகல் நட்டு வழிபட்டு வருகின்றனர்.
நேற்று மதியம் அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 100 பேர் நடுகல் நடுவதற்காக எடுத்துச்சென்றனர். அப்போது, வீரப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். நடுகல் நட்டு வரும் இடம் தங்கள் பட்டா நிலமாக உள்ளதால், இனிமேல் அனுமதிக்க முடியாது எனக்கூறி தடுத்தனர். இதனால், மோதல் அபாயம் ஏற்பட்டது.
இதுகுறித்த தகவலின்பேரில், குமாரபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.நடுகல் நடும் இடத்தின் உரிமை தொடர்பாக இருதரப்பினரிடமிருந்தும் ஆவணங்கள் கேட்கப்பட்டது.
இதில், வீரப்பம்பாளையம் தரப்பினர் தங்களுக்கு சொந்தமான இடமென்பதற்கான சில ஆவணங்களை காவல்துறையில் கொடுத்தனர். மேல்வளவு தரப்பினரிடம் உரிய ஆவணங்கள் ஏதும் இல்லை. இதுகுறித்து குமாரபாளையம் வட்டாட்சியர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அதிகாரிகளின் நீண்ட நேரம் ஆலோசித்தனர்.
இதையடுத்து, நாளை(இன்று) மதியம் தாலுகா அலுவலகத்தில் சமரச பேச்சுவார்த்தை நடத்துவதெனவும், இதில் இருதரப்பினரும் பங்கேற்று தங்கள் தரப்பு கருத்துக்களை தெரிவிக்கும்பட்சத்தில் உரிய தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி கூறினர். இதன்பேரில், இருதரப்பினரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.