குளத்தூர்: குளத்தூர் அருகே முறையான பராமரிப்பின்றி முற்றிலும் உருக்குலைந்த சிப்பிகுளம் சாலை விரைவில் சீரமைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்புடன் மக்கள் உள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அடுத்த சிப்பிகுளம், கீழவைப்பார் மீனவ கிராமம் உள்ளது. கடற்கரை பகுதியான இக்கிராமத்தில் பெரும்பாலோனார் கடல் தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர். அன்றாடத்தேவைகளுக்கு குளத்தூர், விளாத்திகுளம், தூத்துக்குடி போன்ற பகுதிகளுக்கு சென்று வருவர். இக்கிராமத்திற்கு குளத்தூரில் இருந்து ஒரு சாலைவழியாகவும், பனையூர் விளக்கு கிழக்கு கடற்கரைச்சாலையில் இருந்து இணைப்பு சாலை வழியாகவும், குளத்தூர், வைப்பார் கிழக்கு கடற்கரைச்சாலை வழியாகவும் என மூன்று வழிகளில் செல்லலாம்.
இந்நிலையில் பனையூர் விளக்கு பகுதியில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ள இணைப்புச்சாலையானது முறையான பராமரிப்பின்றி கடந்த பல மாதங்களாக கற்கள் பெயர்ந்து உருக்குலைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால் இக்கிராமத்திற்கு செல்லும் வாகனங்கள் பள்ளங்களில் சிக்கி பழுதாகிவிடுவதுடன், பயணங்களும் குறிப்பிட்ட நேரத்திற்குள்ளாக செல்லமுடியாமல் தடை படுகிறது. மேலும் மீனவகிராமமான இக்கிராமத்திற்கு மீன்களை ஏலம் எடுப்பதற்காக வரும் வெளியூர் மீன்வியாபாரிகளும் வாகனங்களில் வந்து செல்வது கடினமாகவே உள்ளது. இதனால் அவதிப்படும் கிராம மக்கள், இதுவிஷயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தனிக்கவனம் செலுத்தி விரைவாக சீரமைக்க முன்வருவார்களா? என்ற எதிர்பார்ப்புடன் உள்ளனர்.