தூத்துக்குடி: குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் இன்று நள்ளிரவு சூரசம்ஹாரத்தை காண பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் குவிந்து வருகின்றனர். திருச்செந்தூர் அடுத்த குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. கடந்த 15-ம் தேதி கொடியேற்றத்துடன் இங்கு தொடங்கிய திருவிழா இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதையொட்டி பக்தர்கள் விதவிதமான வேடங்கள் அணிந்து ஊர் ஊரக சென்று காணிக்கை பெற்று முத்தாரம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்துவது விழாவின் சிறப்பம்சம் ஆகும்.
இதற்காக விரதம் இருக்கும் பக்தர்கள் காளி, முருகன், விநாயகர், கிருஷ்ணர், ராமர், வள்ளி, குரங்கு, கரடி, சிங்கம், ராஜா, ராணி, குறத்தி என விதவிதமான மனத்திற்கு பிடித்த வேடங்களை பூண்டு மேளதாளம் முழங்க நடனமாடி வசூலில் ஈடுபடுகின்றனர். குலசேகரப்பட்டினம் திருவிழாவின் உச்சகட்ட நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று நள்ளிரவு அரங்கேறவுள்ளது.
இதனை காண பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் முத்தாரம்மன் கோயிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். விழாவையொட்டி தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் 2,500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சுகாதாரத்துறை சார்பில் 3 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.