தூத்துக்குடி: குலசேகரபட்டினம் தசரா திருவிழாவை முன்னிட்டு வருகிற 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் ஏரல், சாத்தான்குளம், திருச்செந்தூர் தாலுகா பகுதிகளில் உள்ள 27 டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுபான பார்களை மூட மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் 11 நாட்கள் நடைபெறும் தசரா திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. கொடி மரத்திற்கு தர்ப்பை புல் கொண்டு அலங்காரம் செய்து 16 வகையான அபிஷேகம் செய்யப்பட்டது. கொடியேற்ற நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவின் சிகரமான மகிஷாசூர சம்ஹாரம் 24ம் தேதி நள்ளிரவு நடைபெற உள்ளது.
மைசூர் தசரா விழாவிற்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமர்சையாக நடைபெறும். திருவிழாவில் தமிழ்நாடு முழுவதிலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து வேடம் அணிந்து ஊர்வலம் வருவர்.
இந்நிலையில் குலசை தசரா திருவிழாவில் வேடம் அணியும் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் அறிவுறுத்தியுள்ளார். போலீஸ் மற்றும் போலீஸ் சார்ந்த சீருடை போன்ற வேடங்கள் அணிய பக்தர்களுக்கு அனுமதி கிடையாது மற்றும் சாதிய அடையாளங்களுடன் பக்தர்கள் கோவிலுக்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது குலசேகரபட்டினம் தசரா திருவிழாவை முன்னிட்டு வருகிற 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் ஏரல், சாத்தான்குளம், திருச்செந்தூர் தாலுகா பகுதிகளில் உள்ள 27 டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுபான பார்களை மூட மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.