உடன்குடி: லட்சக்கணக்கான பக்தர்களின் ஓம்காளி, ஜெய்காளி கோஷம் விண்ணதிர குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவில் சிகர நிகழ்ச்சியான மகிஷாசூர சம்ஹாரம் நடந்தது. மைசூருக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான தசரா திருவிழா, கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 10 நாட்களும் இரவில் அம்மன் பல்வேறு அலங்காரத்தில் வீதியுலா வைபவம் நடந்தது. 10ம் திருவிழாவான நேற்று (24ம் தேதி) காலை 10.30 மணிக்கு அம்மனுக்கு மகா அபிஷேகம், இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. நள்ளிரவு 12 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியாக அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோயில் முன்பு எழுந்தருளினார். தொடர்ந்து லட்சக்கணக்கான பக்தர்களின் ஓம்காளி, ஜெய்காளி கோஷம் விண்ணதிர முத்தாரம்மன், மகிஷாசூரனை சம்ஹாரம் செய்தார்.
இன்று (25ம் தேதி) அதிகாலை 1 மணிக்கு சூரசம்ஹாரம் முடிந்ததும் கடற்கரை மேடையில் அம்மன் எழுந்தருள அபிஷேக ஆராதனை, அதிகாலை 2 மணிக்கு அம்மனுக்கு சிதம்பரேஸ்வரர் கோயில் முன்பு சாந்தாபிஷேக ஆராதனையும், தொடர்ந்து திருத்தேரில் பவனி வந்து தேர் நிலையம் சென்றடைதலும் நடந்தது. காலை 6 மணிக்கு பூஞ்சப்பரத்தில் அம்பிகை திருவீதியுலா புறப்படுதல், மாலை 4 மணிக்கு அம்மன் திருக்கோயில் வந்து சேர்தல், மாலை 4.30 மணிக்கு காப்பு களைதல், நள்ளிரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடக்கிறது. 12ம் திருவிழாவான நாளை (26ம் தேதி) அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள், பாலாபிஷேகம் நடக்கிறது. திருவிழாவையொட்டி நாகர்கோவில், நெல்லை, சாத்தான்குளம், தூத்துக்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களிலும் பக்தர்கள் குவிந்தனர். தசரா குழுவினர், முக்கிய கிராம சந்திப்புகளில் கலைநிகழ்ச்சிகள் நடத்தி காணிக்கை வசூலில் ஈடுபட்டு ஊர்வலமாக குலசேகரன்பட்டினம் வந்தனர். பக்தர்களின் வசதிக்காக குலசேகரன்பட்டினத்தில் ஆங்காங்கே சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. விழாவையொட்டி தூத்துக்குடி எஸ்பி தலைமையில் 2500 போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.