தூத்துக்குடி: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவை முன்னிட்டு உடன்குடியில் தசரா குழுவினருக்கு தேவையான கிரீடம், சவுரி முடிகள், கண் மலர் உள்ளிட்ட வேடப்பொருட்கள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். மைசூருக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டுக்கான தசரா திருவிழா, வரும் அக்டோபர் 15ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம், அக்.24ம் தேதி நள்ளிரவு சிதம்பரேஸ்வரர் கோயில் கடற்கரையில் நடக்கிறது.
பொதுவாக தசரா திருவிழாவையொட்டி வேடமணியும் பக்தர்கள் 61 நாள், 41 நாள், 31 நாள், 21 நாள், 11 நாள் என தங்கள் வசதிக்கேற்ப விரதமிருந்து வேடம் அணிவது வழக்கம். இந்தாண்டு தசரா திருவிழாவையொட்டி காளி வேடம் அணியும் பக்தர்களுக்கு தலைக்கு கிரீடம், கண் மலர், நெத்தி பட்டை, வீரப்பல், இடுப்பு ஒட்டியாணம், கைப்பட்டை, சூலாயுதம், வாள், ஈட்டி உள்ளிட்ட பொருட்கள் தயாரிப்பதில் உடன்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்காக பெரும்பாலான பக்தர்கள் தங்களது தலை சுற்றளவு, இடுப்பளவை கொடுத்துள்ள நிலையில் கிரீடம், ஒட்டியாணம் தயாரிப்பது உள்ளிட்ட பணிகள் ஜோராக நடந்து வருகிறது.
ராமன், லட்சுமணன், சிவன், பார்வதி, லட்சுமி, சரஸ்வதி, காளி, அட்டகாளி, கருங்காளி, சுடுகாட்டு காளி, குறவன், குறத்தி என பல்வேறு வேடங்களை பக்தர்கள் விரும்பி அணிகின்றனர். இதையொட்டி ஏராளமானோர் ஆங்காங்கே குடில் அமைத்து வேடப்பொருட்கள் தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு வேடப்பொருட்களை தயாரிப்பவர்கள் கடுமையான விரதம் மேற்கொண்டுள்ளனர். சவுரி முடிகள் நானூறு ரூபாயில் தொடங்கி ரூ.3 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிரீடம் விலை ரூ.800ல் தொடங்குகிறது.