குஜிலியம்பாறை : குஜிலியம்பாறையில் இருந்து பாளையம் செல்லும் வழித்தடத்தில் சாலையோரம் உள்ள மெகா சைஸ் பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
திண்டுக்கல்-கரூர் மாநில நெடுஞ்சாலையின் மையப்பகுதியில் குஜிலியம்பாறை உள்ளது. வாகன போக்குவரத்து அதிகளவு உள்ள இவ்வழித்தடம் இருவழிச்சாலையாக இருந்து வந்தது.
இதையடுத்து வாகன போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கிலும், வாகன விபத்துக்களை தடுக்கும் விதமாகவும் திண்டுக்கல் & கரூர் மாநில நெடுஞ்சாலை வழித்தடத்தில், திண்டுக்கல்லில் இருந்து குஜிலியம்பாறை வழியாக மாவட்டத்தின் எல்லை முடிவு டி.கூடலூர் வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டது. குஜிலியம்பாறையை அடுத்துள்ள சிலும்பாக்கவுண்டனூர் பிரிவு சாலை, பாளையம் ஆகிய இடங்களில் இன்னும் நான்கு வழிசாலைப் பணி முழுமை பெறாமல் உள்ளது.
இந்நிலையில் குஜிலியம்பாறையில் இருந்து பாளையம் செல்லும் சாலையில், அனியாப்பூர் பிரிவு சாலை முன்பாக சாலையை ஒட்டியவாறு மெகா சைஸ் பள்ளம் உள்ளது. இந்த வழித்தடத்தில் நான்கு வழிச்சாலை பணி நிறைவுபெற்ற நிலையில், சாலையை ஒட்டியவாறு உள்ள மெகா சைஸ் பள்ளத்தில் மண் கொட்டி நிரப்பாமல் அப்படியே விட்டுச் சென்றுள்ளனர். இதனால் சாலையோர பள்ளம் வாகன ஓட்டிகளுக்கு தெரியாமல் உள்ளது.
பகல் நேரங்களில் இச்சாலையில் வாகனங்கள் ஒன்றையொன்று கடந்து செல்லும் போது, பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் இரவு நேரத்தில் இச்சாலையில் வாகன விபத்து அதிகளவு ஏற்பட வாய்ப்புள்ளது.எனவே வாகன விபத்து ஏற்பட்டு அசம்பாவித சம்பவம் நடக்கும் முன்பாக, சாலையோர மெகா சைஸ் பள்ளத்தில் மண்கொட்டி நிரப்பி சீரமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.