நெல்லை: கூடங்குளம் அணுமின் நிலைய கடற்கரை பகுதியில் பாறையில் சிக்கிய இழுவை கப்பலை மீட்க மற்றொரு கப்பல் வருகை தந்துள்ளது. கூடங்குளத்தில் ரஷ்ய தொழில்நுட்பத்தில் ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அணுஉலைகள் செயல்பட்டு வருகிறது. இதுதவிர 3 மற்றும் 4 ஆவது அணுஉலைகளுக்கான கட்டுமானப் பணிகள் முடிவுறும் நிலையிலும், 5 மற்றும் 6வது அணு உலைகளுக்கான பணிகள் முழுவீச்சிலும் நடந்து வருகிறது. இந்த 5 மற்றும் 6 அணு உலைகளுக்கான நீராவி ஜெனரேட்டர்கள் ரஷ்யாவில் இருந்து கப்பல் மூலமாக தூத்துக்குடி துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தது.
பின்னர் அங்கிருந்து மிதவை கப்பலில் ஏற்றப்பட்டு இழுவை கப்பல் மூலம் கடல் வழியாக இழுத்து வரப்பட்டது. இந்த மிதவை கப்பல் கூடங்குளம் அணுஉலை அருகே வந்தபோது இழுவைக் கப்பலில் இருந்து மிதவை கப்பலை இழுக்க பயன்படுத்தப்பட்ட கயிறு அறுந்து விட்டது. இதையடுத்து மிதவை கப்பல் கடல் அலையில் அந்தப் பகுதியில் கடலுக்கு அடியில் உள்ள பாறையில் தட்டி நின்றது. மிதவை கப்பலை மீட்கும் பணியில் இழுவைக் கப்பல் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கூடங்குளம் அணுமின் நிலைய கடற்கரை பகுதியில் பாறையில் சிக்கிய இழுவை கப்பலை மீட்க மற்றொரு கப்பல் வருகை தந்துள்ளது. கொழும்பு துறைமுகத்தில் இருந்து மற்றொரு இழுவை கப்பல் கூடங்குளம் கடல்பகுதிக்கு வந்துள்ளது. இன்று அமாவாசை என்பதால் கடலில் காற்றின் வேகமும் அலைகளின் சீற்றமும் அதிகமாக இருக்கும். கூடங்குளம் அணுமின்நிலைய பகுதியில் இருந்து 2 நாட்டிகல் மைல் தொலைவில் இழுவை கப்பல் நங்கூரம் இடப்பட்டுள்ளது. கடலின் சீற்றம் குறைந்தவுடன் மீட்பு பணிகள் தொடங்கப்படும் என்று அணுமின் நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.