கூடலூர் : நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் இ பாஸ் எடுக்க வேண்டுமென்ற நடமுறை கடந்த 7-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த நடவடிக்கை ஊட்டிக்கு அதிக அளவில் வரும் சுற்றுலா பயணிகளை கட்டுப்படுத்துவதற்கும்,கூட்ட நெரிசல் போக்குவரத்து நெரிசல்களை தவிர்ப்பதற்காகவும் ஏற்படுத்தப்பட்டது.ஆனால் இந்த நடவடிக்கையால் கேரளா மற்றும் கர்நாடகாவில் இருந்து திருமணம்,இறப்பு, வியாபாரம் போன்ற தேவைகளுக்காக கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாவின் பல்வேறு பகுதிகளுக்கும், கர்நாடக மாநிலத்தின் மைசூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பயணிகளின் வாகனங்களையும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களுடன் கூடலூர் எல்லைப் பகுதிகளான நாடுகாணி, லாடி,தாளூர்,நம்பியார்குன்னு,பாட்டவயல் மற்றும் கர்நாடக எல்லை கக்கனல்லா உள்ளிட்ட சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தப்படுவதால் வாகன நெரிசல் ஏற்படுவதோடு,தேவையற்ற சிரமங்களும் பயணிகளுக்கு ஏற்படுகின்றன.
கூடலூர்,பந்தலூர் எல்லை பகுதிகளில் உள்ள அனைத்து சாலைகள் வழியாக பிற மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் கூடலூர் வரை வந்து அங்கிருந்து ஊட்டிக்கு செல்லும் சாலையில் ஒன்றாக இணைந்து செல்கின்றன.எனவே ஊட்டிக்கு வரும் வாகனங்களின் இ பாஸ் பரிசோதனைக்காக வாகனங்களை பல்வேறு எல்லைகளில் தடுத்து நிறுத்துவதை தவிர்த்து, அதற்கான சோதனைகளை ஊட்டி சாலையில் சில்வர் கிளவுட் பகுதியில் உள்ள வனத்துறை சோதனைச் சாவடியில் செய்ய நடவடிக்கை எடுத்தால், ஊட்டிக்கு செல்லாத பிற பயணிகள் எவ்வித சிரமமுமின்றி சென்று வர முடியும் என பாதிக்கப்பட்ட பயணிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இப்பகுதியில் சாலை மிகவும் அகலமான பகுதியாக உள்ளதால், வாகனங்களை நிறுத்தி சோதனை செய்யும்போது பிற வாகனங்களின் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமலும் போக்குவரத்து நெரிச்சலும் ஏற்படாமலும் இருக்கும்.மேலும் பகுதியில் பொதுக் கழிப்பிடமும் இருப்பதால் வாகன ஓட்டிகள் பயணிகள் இதனை பயன்படுத்திக் கொள்ளவும் வசதியாக இருக்கும்.அத்துடன் இப்பணிகளுக்காக பல எல்லைகளிலும் அரசு ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால் அரசு அலுவலகங்களில் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றன.
பயணிகள், வாகன ஓட்டிகள், வியாபாரிகள் மற்றும், பொதுமக்களை பாதிக்கும் இப்பிரச்னைக்கு உரிய தீர்வு கான கூடலூரில் இருந்து ஊட்டிக்கு செல்லும் சாலையில் சில்வர் கிளவுட் பகுதிக்கு இ பாஸ் சோதனையை மாற்றியமைக்க நீலகிரி மாவட்ட நிர்வாகம் பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.