கண்ணில் காண்பவற்றை எல்லாம் புகைப்படங்களாக்கி அசத்தி வருகிறார் ஈரோட்டை சேர்ந்த பெண் புகைப்பட கலைஞர் திலகவதி குட்டி. இவரது கேமரா கைவண்ணத்தில் தமிழகத்தின் குடைவரை கோவில்கள் அனைத்தும் புகைப்படங்களாய் அழகுற உயிர் பெற்று வருகிறது. கிரியேஷன் மற்றும் கிரியேட்டிவிட்டி அதனை வைத்துதான் புகைப்படத் துறையில் நமக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்கிறார் திலகவதி குட்டி.அவர் போட்டோகிராபி குறித்து நம்மிடையே பகிர்ந்து கொண்டது….
போட்டோகிராபி தான் உங்கள் எதிர்காலம் என யோசித்தது ஏன்?
சின்ன வயசுல இருந்தே போட்டோகிராபியில் எனக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. அதன் காரணமாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் கேமரா வாங்கி போட்டோ எடுத்துப் பார்ப்பது வழக்கம். கேமரா மொபைல் வந்த பொழுது அதில் போட்டோ எடுத்து, அதனை எப்படி எடுக்கிறோம் என பரிசோதிப்பது என்று எனது போட்டோகிராபி ஆர்வம் அதிகமானது. அதன்பிறகு ஆன்லைன் புகைப்பட வகுப்பில் சேர்ந்தேன். அதில் கலந்து கொண்டு நிறைய கற்றுக் கொண்டேன். அந்த அனுபவத்தில் எடுத்த போட்டோக்களை பலரும் பாராட்ட அப்படி ஆரம்பித்தது தான் எனது புகைப்பட ஆர்வம்.
உங்களுக்கு ஆர்க்கிடெக்சர் புகைப்படங்களில் ஆர்வம் குறித்து…
ஆர்க்கிடெக்சர் குறித்த போட்டோகிராபியில் எனக்கு ஆர்வம் அதிகமா இருந்த காரணத்தினால வெளிமாநிலங்களுக்கு சென்று போட்டோ எடுக்க ஆரம்பித்தேன். கட்டடக்கலைகள் ஒய்சாள கட்டடக்கலை சோழமன்னர்களுடன் கட்டிடக்கலை, பழங்காலத்து 1200 மற்றும் 1300 வருடங்களுக்கு முன்பே கட்டப்பட்ட கோயில் கோபுரங்களையும் கட்டடக் கலைகளையும் புகைப்படம் எடுத்துக் கொண்டு இருந்த நிலையில், ஏன் வெளி மாநிலங்களுக்கே போய் எடுக்க வேண்டும். நம் ஊரில் இருக்கும் கட்டடக்கலைகளையே போட்டோ எடுக்கலாமே என்கிற எண்ணம் தோன்றியது. அப்படியான தேடல் ஆரம்பிக்கும்போது தான் ஏழாம் நூற்றாண்டு, எட்டாம் நூற்றாண்டின் கட்டடங்கள் எல்லாம் இன்னமும் மலைகளில் ஆங்காங்கே இருக்கிறது என்று கேள்விப்பட்டேன்.அவை என்னென்ன என்று விசாரிக்கும் போது அதன் பெயர் குடைவரை கோவில்கள் என தெரிந்தது, அதன் அழகில் மயங்கிய எனக்கு அப்போதுதான் இந்த குடைவரைக் கோவில்களை ஆவணப்படுத்த வேண்டும் என்கிற எண்ணமும் உதித்தது.
குடவரை கோவில்களை ஆவணப்படுத்திய விவரங்கள் பகிரவும் ...
பெரிய மலைகளைக் குடைந்து அமைக்கப்பட்ட கோயில்கள் “குடைவரைக் கோயில்கள்” என அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் 15 ஆம் நூற்றாண்டுக்குப் பின் சுமார் ஆயிரம் ஆண்டுகள் வரை நீண்ட காலம் நிலைத்து நிற்கும் வகையில் மரம், மூங்கில், வைக்கோல், புல் வகைகள் போன்றவைகளைப் பயன்படுத்தியே இக்கட்டடங்களை அமைத்து வந்தார்கள். 2-3 ஆம் நூற்றாண்டு முதல் பௌத்த மதம் செல்வாக்குப் பெறத் தொடங்கிய காலத்தில், நிலைத்து நிற்கக் கூடிய கட்டடங்களை அமைப்பதற்கு, பெரிய மலைப் பாறைகள் இருக்குமிடங்களில், அவற்றைக் குடைந்து கட்டடங்களை அமைத்தார்கள். இந்த குடைவரைக் கோவில்களில் 80 கோவில்களை நான் இதுவரை ஆவணப்படுத்தி
உள்ளேன்.
இமயமலையில் புகைப்படம் எடுத்த அனுபவம் பற்றி சொல்லுங்கள்…?
நான் சென்ற வருடம் இமயமலையில் கஞ்சன் ஜூங்கா வரையில் சென்று போட்டோகிராபி செய்து வந்தேன். மனதிற்கு மிக நெருக்கமான இடம் என்றால் அது ஹிமாலயா ரேஞ்சஸ் என்று தான் சொல்ல வேண்டும். ரொம்ப அழகான ஒரு ஆத்மார்த்தமான இடம் அது. போட்டோகிராபிக்கு தகுந்த ஒரு இடம் கூட சொல்லலாம். இயற்கை மற்றும் மலை விரும்பிகளுக்கு அந்த இடம் சொர்க்கம் என்றும் சொல்லலாம்.
செட்டிநாடு காரைக்குடி வீடுகளின் அழகியலை உங்கள் பார்வையில் விவரிக்கவும்…
சின்ன வயதில் சினிமாக்களில் இந்த பிரமாண்டமான காரைக்குடி வீடுகளை பார்க்கும்பொழுது இந்த வீடுகளை நேரில் போய் தொட்டுப் பார்க்க வேண்டும் என்கிற ஆசை மனசுக்குள் எப்பவும் இருக்கும். சிவகங்கை மாவட்ட குடைவரைக்காக போகும்பொழுது எப்படியாவது இந்த இடங்களுக்கு பிளான் பண்ணி போகணும்னு முடிவு செய்து தான் போயிருந்தேன் அதுக்கேத்த மாதிரி கானாடுகாத்தான், ஆத்தங்குடி, பள்ளத்தூர் ஆகிய இடங்களுக்கு சென்று அங்குள்ள 200 வருடங்கள் பழமையான காரைக்குடி வீடுகளை தேடி படம் எடுத்துட்டு வந்து இருக்கேன். மிகச்சிறப்பாக வந்திருக்கிறது அந்த புகைப்படங்கள்.
ராயவரம் குடைவரைக் கோவில்கள் குறித்து…
திருமெய்யம் தாலுகாவில்கடியப்பட்டி மற்றும் ராயவரம் இடையே ஒரு தொலைதூர கிராமம் குளாலக்கோட்டையூர். புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 19 குடைவரைகள் இருக்கிறது. அதன் புறநகரில் ஒரு தட்டையான தாழ்வான குன்று உள்ளது. கருவறையை அடைவதற்கான படிகளுடன் கூடிய பக்கவாட்டு சுவர்கள், கூரை மற்றும் தளம் ஆகியவை பாறை வெட்டு நீட்சிகளைக் கொண்டுள்ளது. பாறையில் வெட்டப்பட்ட சந்நதி மற்றும் தெய்வங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இக்குடைவரை கோவிலை உள்ளூரில் ‘பாறைக்கோயில்’ என்று அழைக்கிறார்கள். இதன் கருவறையின் பின்புறச் சுவரில் லிங்கம் ஒட்டியிருக்கும். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரே பாறையால் வெட்டப்பட்ட கோவில் என்பதே இதன் தனிச்சிறப்பு.
மகிபாலன்பட்டி குடைவரை குறித்து….
மகிபாலன்பட்டி குடைவரை சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தாலுகாவில் உள்ள மகிபாலன்பட்டியில் அமைந்துள்ளது. இது கிபி 9 ஆம் நூற்றாண்டில் தொடக்ககாலப் பாண்டியர்களால் அமைக்கப்பட்டது. இது கருவறையை மட்டுமே கொண்ட சிறிய குடைவரை ஆகும். பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமான இக்கோயில் தற்போது வருவாய்த்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஊருக்குப் புறத்தேயுள்ள குன்று ஒன்றில் மேற்கு நோக்கிய சரிவில் இக்குடைவரை கோயில் அமைந்துள்ளது. கோயிலின் வாயிலின் இரண்டு பக்கங்களிலும் அரைத் தூண்கள் காணப்படுகின்றன. கருவறைக்குள் உள்ள சிவலிங்கத்தினை தாய்ப்பாறையிலேயே செதுக்கியுள்ளனர். வெளியே ஒரு கோட்டமும் அதில் ஒரு பிள்ளையார் சிற்பமும் செதுக்கப்பட்டுள்ளன. குடைவரையின் முகப்புச்சுவரில், பிற்காலப் பாண்டியர்காலத்துக்குரிய கல்வெட்டு ஒன்று பொறிக்கப்பட்டுள்ளது.
பாராட்டுகள் மற்றும் விருதுகள் என்னென்ன விளக்கமாகக் கூறுங்கள்….
நிறைய ஆன்லைன் போட்டோகிராபி போட்டிகளில் கலந்துகொண்டு அதில் பல சர்டிபிகேட்டுகளும் அவார்ட்களும் வாங்கி இருக்கிறேன். பல்வேறு போட்டோகிராபி குழுக்களில் நடைபெறும் போட்டோகிராபி குறித்த பல போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் வாங்கி இருக்கிறேன். இப்படி பல்வேறு பாராட்டுகளும் விருதுகளும் இந்த போட்டோகிராபி எனக்கு வாங்கிக் கொடுத்திருக்கிறது என்பதே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஒரு இணையதள புகைப்பட போட்டியில் எனக்கு முதல் பரிசை வாங்கிக் கொடுத்த தமிழக அரசின் முத்திரையாக உள்ள வில்லிபுத்தூர் ஆண்டாள்கோவில் கோபுரப் புகைப்படம் எனக்கு பெருமகிழ்ச்சியை பெற்றுத் தந்தது.
எதிர்காலத் திட்டங்கள்…..
இதுவரை தமிழ்நாட்டில் இருக்கும் எண்பது குடைவரைக் கோவில்களை ஆவணப்படுத்தி இருக்கிறேன். அவை முடிந்ததும் இந்திய அளவிலான குடைவரைகளை ஆவணப்படுத்தும் முயற்சியில் இருக்கிறேன். இந்த அனுபவங்கள் மற்றும் தகவல்கள் அனைத்தையும் திரட்டி புத்தகமாக வெளியே கொண்டு வர வேண்டும் என்கிற ஆசையும் இருக்கிறது.பெண்கள் அதிகம் புகைப்படத் துறைக்கு வரவேண்டும் என்பது எனது பெரும் ஆசை. அப்படி ஆர்வமுடன் வருபவர்களுக்கு இத்துறையில் ஏராளமான வாய்ப்புகள் கிடைக்கும் என்கிற நம்பிக்கையும் இருக்கிறது. ஆண்களைக் காட்டிலும் புகைப்படத்துறையில் பெண்களுடைய வரவு ரொம்பவும் குறைவாக தான் இருக்கிறது என்கிறார் திலகவதி குட்டி.
– தனுஜா ஜெயராமன்