பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள நான்கு அணைகள் முழுமையாக நிரம்பியதால், கிருஷ்ணராஜ சாகர் அணையில் முதல்வர் சித்தராமையா மற்றும் துணைமுதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோர் சமர்ப்பண பூஜை நடத்தினர். பின்னர் முதல்வர் சித்தராமையா கூறும்போது, காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு ஆண்டுதோறும் 177.25 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும். நீதிமன்றங்களின் உத்தரவை கர்நாடக அரசு தவறாமல் பின்பற்றி ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் திறந்து வருகிறோம்.
ஒவ்வொரு மாதமும் 9 டி.எம்.சி. தண்ணீர் திறக்க வேண்டும் என்ற உத்தரவையும் செயல்படுத்தி வருகிறோம். கடந்த 2018-19ம் ஆண்டு 404.444 டிஎம்சி, 2019-20ம் ஆண்டில் 275.40 டிஎம்சி, 2020-21ம் ஆண்டில் 211.316 டிஎம்சி, 2021-22ல் 281.084 டிஎம்சி, 2022-23ல் 667.533 டிஎம்சி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டு ஜூன் மாதம் கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகள் முழுமையாக நிரம்பி இருப்பதால், 9 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் என்பதற்கு பதிலாக 22 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிற்கு செல்லும் தண்ணீரை முழுமையாக சேமித்து வைக்க வசதி இல்லாமல், நீர் முழுவதும் கடலில் வீணாக கலக்கிறது. இதை தவிர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் திட்டம் செயல்படுத்த கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான திட்ட வரைவு தயாரித்து ஒன்றிய அரசின் அனுமதிக்காக அனுப்பி வைத்துள்ளோம். ஒன்றிய அரசு அனுமதி வழங்கியதும் செயல்படுத்தப்படும். மேலும் மேகதாதுவில் அணை கட்டினாலும் கர்நாடகா-தமிழ்நாடு இரு மாநில விவசாயிகளுக்கும் நன்மை ஏற்படும் என்றார்.