சென்னை: கூட்டுறவுச் சங்கங்கள் வழங்கும் சேவைகளை பொது மக்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் அறிந்து கொள்ளும் வகையில், “கூட்டுறவு (Kooturavu)” என்ற செயலியினை கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்
கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அவர்கள் தலைமையில் இன்று (27.08.2024) சென்னை, கீழ்ப்பாக்கம் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய அலுவலகத்தில், கூட்டுறவுத்துறையின் அறிவிப்புகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அவர்கள், கூடுதல் பதிவாளர்கள், இணைப்பதிவாளர்கள் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர்கள் ஆகியோர்களுடன் கலந்தாலோசித்து, கடந்த காலங்களில் அறிவிக்கப்பட்ட கூட்டுறவுத்துறை அறிவிப்புகளின் தற்போதை நிலை குறித்து கேட்டறிந்தார்கள்.
பின்னர் கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அவர்கள் பேசும்போது தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் எண்ணங்களுக்கேற்ப கூட்டுறவுத்துறை சிறப்பான செயல்பாடுகளை செய்துவருகிறது. அரசின் திட்டங்கள், பொங்கள் பரிசு தொகுப்பு, நிவாரண தொகை வழங்குதல் போன்ற சிறப்பு அறிவிப்புகளை மக்களிடத்தில் கொண்டு செல்லும் பணியினையும் செவ்வனே செய்து வருகிறது பாராட்டுக்குரியது. இந்த ஆய்வுக்கூட்டம் மூலம் கடந்த காலங்களில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் 100 சதவீதம் செயல்படுத்தப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்பு திட்டமான மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்காக தமிழ் மகள் தொடர் வைப்புத்திட்டம் மூலம் 8,19,419 சேமிப்புக் கணக்குகள் துவக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பிற்கிணங்க கூட்டுறவு அமைப்புகள் மூலம் 500 முதல்வர் மருந்தகங்களும் மற்றும் தொழில்முனைவோர் மூலம் 500 முதல்வர் மருந்தகங்களும் திறக்கப்படவுள்ளது. முதல்வர் மருந்தகங்களுக்கு அரசு மானியமாக ரூ.3 லட்சம் வரை வழங்குவது குறிப்பிடத்தக்கது.
கூட்டுறவு வங்கிகள் மூலம் நகை மதிப்பில் 75 சதவீதம் வரை கிராமுக்கு ரூ.5000 வரை நகைக்கடன் வழங்கப்பட்டு வருகிறது. அதற்கான வட்டிவிகிதம் 9 முதல் 10.50 சதவீதம் ஆகும். தனிநபர் ஒருவருக்கு ரூ.30 லட்சம் வரை நகைக்கடன் வழங்கப்படுகிறது. இதன் மூலம் விவசாயிகளுக்கு தொடர்ந்து நகைக்கடன் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.2 லட்சம் வரையிலும், நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.20 லட்சம் வரையிலும் 12 சதவீத வட்டி விகிதத்தில் வாகன கடன் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் கூட்டுறவுத்துறையின் மானியக்கோரிக்கையின் போது, “கூட்டுறவு அமைப்புகளில் அங்கத்தினர்களாக உள்ள விவசாய பெருங்குடி மக்கள் சிறு வியாபாரிகள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், மாற்றுத்திறனாளிகள், சிறுபான்னையின உறுப்பினர்கள் மற்றும் நகைக்கடன் பெறும் இணை உறுப்பினர்கள் விரைவாகவும், எளிதாகவும், கடன் பெற்றிட இணைய வழி கடன் வழங்கும் வசதி செயல்படுத்தப்படும். இதன் மூலம் இளைய தலைமுறையினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் காலவிரயமின்றி உடனடி வங்கிச் சேவை பெறுவது உறுதிச் செய்யப்படும்.” என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன்படி கூட்டுறவுத் துறையில், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில், பல்வேறு வகை கூட்டுறவுச் சங்கங்கள் வழங்கும் சேவைகளை பொது மக்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் அறிந்து கொள்ளும் வகையில், கூட்டுறவுச் சங்கங்களால் வழங்கப்படும் சேவைகள் தொகுக்கப்பட்டு, கூட்டுறவு (Kooturavu) என்ற பெயரில் செயலி உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
இச்செயலி மூலம் கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்கள் மூலம் வழங்கப்படும் பல்வேறு வகைக்கடன் குறித்த தகவல்களை தெரிந்து கொள்ளவும், பொது மக்கள் தங்களது கடன் தேவைக்கேற்ப, கடன் விண்ணப்பத்தினை இணைய வழியே சமர்ப்பித்திடும் வகையில், இச்செயலியில் கடன் விண்ணப்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இச்செயலி மூலம் கடன் விண்ணப்பத்தில் உரிய விவரங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிப்பதன் மூலம், கடன் விண்ணப்பங்கள் தொடர்புடைய கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் வங்கிகளுக்கு இணையவழி சமர்ப்பிக்கப்பட்டு, கடன் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் மூலம் உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் கடன் தகவல்களை தெரிந்து கொள்ளவும், கடன் விண்ணப்பத்தினை இணைய வழியில் சமர்ப்பிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இச்செயலி மூலம், பயிர் கடன், மீன் வளர்ப்பு கடன், கால்நடை பராமரிப்புக் கடன் மற்றும் இதர வகைக் கடன்களை கடன் விண்ணப்பம் என்ற பகுதியில் சமர்ப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இச்செயலியின் தொகுப்பில் உங்கள் சங்கம் என்ற பகுதியில், பொது மக்கள் தங்களது பகுதியில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகள் அமைந்துள்ள விவரங்களை தெரிந்து கொள்ள வழி வகை செய்யப்பட்டுள்ளது.
இ-வாடகை என்ற பகுதியில், ஒரு உறுப்பினர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் செயல்படுத்தப்படும் வேளாண் சேவை மையங்கள் குறித்த விவரங்களையும், வேளாண் பொறியியல் இயந்திரங்களை வாடகைக்கு எடுத்து பயன்படுத்துவதற்கு ஏற்ப, வேளாண் பொறியியல் இயந்திரங்களின் இருப்பு நிலைினை அறிந்து, தேவையான வேளாண் உபகரணங்களை குறைந்த வாடகைக்கு எடுத்து பயன்படுத்திட ஏதுவாக இ வாடகை பகுதியில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
வங்கி சேவை பகுதியில், பொதுமக்கள் தங்களது பகுதியில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் முகவரியினை தெரிந்து கொண்டு வங்கியினை தொடர்பு கொள்ள வங்கியின் முகவரி மற்றும் தொலைப்பேசி எண் மற்றும் மின் அஞ்சல் விவரங்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கி சேவைப் பகுதியில், கூட்டுறவு வங்கியின் மூலம் வழங்கப்படும் அனைத்து வகைக் கடன்கள் குறித்த விவரங்கள், வழங்கப்படும் கடன் உச்ச அளவு, திருப்பிச் செலுத்தும் அதிகபட்ச கால அளவு, வட்டி விகிதம், கடன் வழங்கும் காரியம் போன்ற விவரங்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
பணியாளர் நாள் என்ற பகுதியில், கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களால் சமர்ப்பிக்கப்பட்ட மனுவின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரத்தினை தெரிந்து கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இசேவை என்ற பகுதியில் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் நடத்தப்படும் பொது சேவை மையங்களின் முகவரி, அலைப்பேசி எண் விவரங்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. பொது மக்கள் அவர்களது மாவட்டம், தாலுக்கா மற்றும் கிராம விவரங்களை தெரிவு செய்வதன் மூலம் அவர்களது பகுதியில் உள்ள பொது சேவை மையங்களின் இருப்பிட விவரத்தினை தெரிந்துகொண்டு பயன் பெறலாம்.
செயலியில், மருந்தகம் என்ற பகுதியில், கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் நடத்தப்படும் மருந்தகங்களின் விவரங்களை, அவர்களது மாவட்டம் மற்றும் நிறுவனத்தின் பெயர்களை தெரிவு செய்வதன் மூலம் பொது மக்கள் அவர்களது பகுதியில் உள்ள கூட்டுறவு மருந்தகங்களை தெரிந்து கொண்டு, 20% தள்ளுபடி விலையில் மருந்துகளை பெற்று பயன் பெறலாம்.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் மூலம் 100 மெ.டன், 500 மெ.டன், 1000 மெ.டன் மற்றும் 2000 மெ.டன் அளவுகளில் கிடங்குகள் கட்டப்பட்டு, கிடங்கு மேம்பாட்டு ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு, பொதுமக்கள் மற்றும் விவசாய உறுப்பினர்களுக்கு அவர்களது விலை பொருட்களை பாதுகாப்பாக வைத்திடவும், விலைப்பொருட்கள் மீது தானிய ஈட்டுக் கடன் பெறவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இச்செயலியில் கிடங்கு என்ற பகுதியில், தமிழகத்தில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்படும் கிடங்குகளின் முகவரி மறறும் அலைப்பேசி எண் விவரங்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாய உறுப்பினர்கள் கிடங்கு வசதியினை குறைந்த வாடகையில் பெற்று பயன் பெறலாம்.
கூட்டுறவுச் செயலியில், நியாயவிலைக் கடை என்ற பகுதியில், தமிழகத்தில் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் நடத்தப்படும் நியாயவிலைக்கடைகள் விவரங்கள் அனைத்தும் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. பொது மக்கள் அவர்களது மாவட்டம், தாலுக்கா மற்றும் கிராம விவரங்களை தெரிவு செய்வதன் மூலம் அவர்களது பகுதிக்குட்பட்ட நியாயவிலைக் கடை முகவரி, தொலைப்பேசி எண் விவரங்களை இச்செயலி மூலம் தெரிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் டாக்டர்.ஜே.ராதாகிருஷ்ணன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் டாக்டர்.ந.சுப்பையன், கூடுதல் பதிவாளர் (நுகர்வோர் பணிகள்) ப.காயத்ரி கிருஷ்ணன் ஆகியோர் உட்பட அனைத்து கூடுதல் பதிவாளர்கள், இணைப்பதிவாளர்கள் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.