சென்னை: புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வெளியிட்ட அறிக்கை: கள் உணவு அது உரிமை என்ற பிரச்சாரம் ஒரு தமிழ்த் தேசியத் தற்குறிக் கூட்டத்தால் முடுக்கி விடப்பட்டு நேரடியாக மரம் ஏறி கள் இறக்கும் போராட்டத்திலும் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம், கள்ளை உணவாகக் கருத முடியாது என்று தெளிவுபடுத்தினார். விசிக தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோரும் கள்ளை உணவாகக் கருதமுடியாது என்பதைத் தெளிவுபடுத்தினர்.
தமிழக மக்களின் நலன் கொண்டு கருத்துகளைத் தெரிவித்துள்ள அனைவருக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பொதுமக்களும், சமூக அமைப்பினரும் சமூக வலைதளங்களில் கள்ளின் போதை தன்மை குறித்து ஆழமான கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர். அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.