மகத்துவம் மிக்க மத்வ மகான்கள் – 1
பூமியில் வாழும் மனித இனங்கள் அனைத்தும், மீண்டும் பிறவாமல் ஆண்டவன் இடத்தில் முக்தியினை அடையவே விரும்புகின்றன. அதற்கு பல மார்க்கங்கள் துணை நிற்கின்றன. அத்தகைய மார்க்கங்களை உருவாக்கி, மனிதனின் கையைப் பிடித்து முக்தியடைய வழிநடத்துவது மகான்களே! மகான் ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதர் “அத்வைதம்’’ என்னும் மார்க்கத்தை உருவாக்கி வழிநடத்தினார். அதேபோல், மகான் ஸ்ரீராமானுஜரால் உருவாக்கப்பட்டதுதான் “விசிஷ்டாத்வைதம்’’. மேலும், “துவைதம்’’ என்னும் ஓர் மார்க்கமும் உண்டு. அது, ஸ்ரீமத்வாச்சாரியாரால் உருவாக்கப்பட்டது. ஸ்ரீமத் மத்வாச்சாரியாரை பற்றி தமிழக ஆன்மிகப் பெருமக்கள் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
காரணம், மத்வாச்சாரியாரும் அவருக்கு பின் வந்த மகான்களும் கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களிலே பிறந்து, வளர்ந்து, மகான் களாக மக்களுக்கு வழிக்காட்டி, பின்னர் அந்தந்த மாநிலத்திலேயே மூலப் பிருந்தாவனமும் (சமாதி) ஆகிவிட்டதால், பெரியதாக தமிழக மக்களுக்கு மத்வரை (மத்வாச்சாரியாரின் சுருக்கமே மத்வர்) பற்றியும், அவர்களின் சீடர்களை பற்றியும் தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவு.
ஆனால், ஸ்ரீமத் மத்வாச்சாரியாரின் வழிவந்த மகான் ஆன ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளை அனைவரும் அறிந்திருப்பர். இதை படித்ததும், “என்னது… ராகவேந்திரரின் குரு மத்வரா’’! என்றுகூட பலருக்கும் எண்ணத்தோன்றும்.ஆம்!.. ஸ்ரீமத் மத்வாச்சாரியார், துவைத சித்தாந்தத்தை மக்களிடையே கொண்டு சேர்க்க, பல சீடர்களை உருவாக்கி, அஷ்ட (எட்டு) மடங்களை நிறுவினார். அதன் பின்பு, பல சீடர்கள் உருவாக, அவர்களைக் கொண்டு கிளை மடங்களை தோற்றுவித்தார், மத்வர். அதில் ஒன்றுதான், ஸ்ரீ ராகவேந்திர மடம்.
ஸ்ரீரங்கம், கும்பகோணம், திருக்கோவிலூர் போன்ற தமிழகத்தின் பல பகுதி களில் மத்வ பரம்பரையில் வழிவழியாக வந்த மூலபிருந்தாவனங்கள் இருக்கின்றன. ஸ்ரீமத் மத்வாச்சாரியாரைப் பற்றியும், அவரின் சீடர்களை பற்றியும், அவர்களின் பெருமைகள் குறித்தும், அவர்கள் எங்கெங்கெல்லாம் மூலப்பிருந்தாவனம் ஆனார்கள் என்பதை பற்றியும் “மகத்துவம் மிக்க மத்வ மகான்கள்’’ என்னும் பகுதியில் நம் அருள் தரும் ஆன்மிகம் வாசகர்களுக்காக பிரத்தியேகமாக (Exclusive) புகைப்படங்களுடன் கூடிய தொகுப்பு, இந்த இதழ் முதல் வெளியாகிறது. முதல் தொகுப்பாக, ஸ்ரீமத் மத்வாச்சாரியாரைப் பற்றி தெரிந்து கொள்வோம், வாருங்கள்…
கடகோலு கிருஷ்ணர்
கர்நாடக மாநிலம் மங்களூர் மாவட்டத்தில் இருந்து சுமார் 58 கி.மீ., தூரத்தில் பயணித்தால், உடுப்பி என்னும் க்ஷேத்திரம் இருக்கிறது. கன்னட மொழியில் “கடகோலு’’ என்று சொல்லக் கூடிய தயிர் கடையும் மத்து ஒன்றை கையில் ஏந்தியவாறு அழகாக நின்ற திருக்கோலத்தில் உடுப்பியில் காட்சிதருகிறார், கிருஷ்ணர். தட்சனின் சாபத்தால் தனது அழகை இழந்த சந்திரன், சிவபெருமானை நோக்கி உடுப்பியில் கடும் தவம் செய்து, இழந்த அழகை திரும்பப் பெற்றார், என்கிறது துவைத சித்தாந்தம்.
அப்படி, சந்திரன் தவம் புரிந்து சாப விமோசனம் பெற்று, சந்திரனால் நிர்மாணம் (உருவாக்கிய) செய்யப்பட்ட திருக்குளம்தான் `சந்திர புஷ்கரணி’. இன்றும் உடுப்பி கிருஷ்ணர் கோயில் அருகேயே சந்திர புஷ்கரணியை காணலாம். “உடு’’ என்றால் சந்திரன்; “பா’’ என்பது அதிபதி ஆக, நட்சத்திரங்களுக்கு அதிபதியான சந்திரன், தவம் புரிந்த இந்த இடம், முதலில் “உடுபா’’ என்றே பெயர் பெற்றது. காலப் போக்கில் அது மருவி, உடுப்பி என்று ஆகிவிட்டது.
எட்டு மடங்கள்
பலிமார் மடம், பேஜாவர் மடம், அதமார் மடம், சோதே மடம், காணியூர் மடம், புத்திகே மடம், கிருஷ்ணபூர மடம், சீரூர் மடம் என உடுப்பி கோயிலைச் சுற்றி அஷ்ட (எட்டு) மடங்கள் இருக்கின்றன. அதன் நடுவில் உடுப்பி கிருஷ்ணர் அழகாகக் கோயில் கொண்டிருக்கிறார். கோயிலின் எதிர்புறத்தில், புஷ்கரணி உள்ளது. அழுக்குகள் இல்லாது தூய்மையாகப் பராமரித்து வருகின்றார்கள். இந்த எட்டு மடங்களைச் சேர்ந்த பீடாதிபதிகள், சுழற்சி முறையில் இரண்டு வருடத்திற்கு ஒரு முறை, உடுப்பி கிருஷ்ணரை பூஜை செய்து வருகின்றார்கள்.
இதற்கு, “பர்யாயம்’’ என்று பெயர். கோயில் புஷ்கரணி அருகில் விறகுக் கட்டைகளை தேர் போல் அடுக்கி அமைத்திருப்பார்கள். அவரவர் பர்யாயம் காலத்தில், இந்த தேர்விறகுக் கட்டைகளை அன்னதானத்திற்கு பயன்படுத்தி, இரண்டு வருடத்திற்குள் பூர்த்தி (விறகுகளை செலவிட வேண்டும்) ஆகியிருக்க வேண்டும். அப்படி பூர்த்தி ஆகவில்லை என்றால், அவர்களின் பர்யாயத்தில் ஏதேனும் ஒரு குறைபாடுகள் இருக்கின்றன என்று பொருள். இது நாள் வரை கிருஷ்ணனின் அருளாசியினால், எந்த ஒரு பர்யாய ஸ்வாமிகளுக்கும் இத்தகைய சோதனை நடந்ததில்லை.
கிருஷ்ண ஜெயந்தி
ஆக, தினமும் நான்கு வேளைகளிலும் அன்னதானம் நடைபெறுகின்றன. கிருஷ்ணஜெயந்தி, அனுமன் ஜெயந்தி, மத்வஜெயந்தி, பர்யாய தினம் ஆகிய காலங்களில் விசேஷமாக அன்னதானம் நடைபெறும். கிருஷ்ண ஜெயந்தி அன்று உடுப்பியே விழாக் கோலம் பூண்டு இருக்கும். உடுப்பி கிருஷ்ணர் கோயில் முழுவதும் மின் விளக்கினால் ஜெகஜொலிக்கும். கிருஷ்ணர், இரவில் பிறந்ததாக ஐதீகம். ஆகையால், உடுப்பி கிருஷ்ணருக்கு இரவில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெறும். மேலும், ரதோற்சவம் (தேர்), ஸ்வாமிகளின் திருவீதி உலா, கோலாட்டம், பஜனை என ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன், உடுப்பி நகரமே அன்றைய தினத்தில் உற்சாகத்துடன் காணப்படும்.
பர்யாயம் தினம்
அதே போல், “பர்யாயம்’’ சமயங்களிலும் உடுப்பி கோலாகலமாக சூழ்ந்திருக்கும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை எட்டு மடம் ஸ்வாமிகளும், கிருஷ்ணனை தொட்டு பூஜை செய்யும் வைபவம். பர்யாயம் தினத்தன்று, பர்யாயத்தில் அமரப்போகும் ஸ்வாமிகளுக்கு மாலை, கிரீடம் என மற்ற மடாதிபதிகள் அவருக்கு மரியாதை செய்வார்கள். உடுப்பியில் உள்ள முக்கிய வி.ஐ.பிகள், கலெக்ட்டர், எம்.எல்.ஏ., எம்.பி., போலீஸ் உயர் அதிகாரிகள், மற்றும் மிக முக்கியமாக அந்தந்த மடத்தை சேர்ந்தவர்கள், பக்தர்கள் என அனைவரும் இதில் கலந்து கொண்டு விழாவை மேலும் சிறப்பு செய்வார்கள். இனி மத்வரை பற்றி தெரிந்துகொள்வோம். நேரடியாக ஸ்ரீ மத்வாச்சாரியாரை பற்றி இந்த தொகுப்பில் தெரிவிக்க முடியும்.
ஆனால், இத்தகைய பெருமை வாய்ந்த உடுப்பி கிருஷ்ணரை ஸ்தாபித்ததே ஸ்ரீ மத்வாச்சாரியார் தானே! ஆகையால் நேரடியாக மத்வரைப் பற்றி தெரிவிக்காது சற்று உடுப்பி கிருஷ்ணரை பற்றி தெரிவிக்க விருப்பப்பட்டோம். சரி… மத்வாச்சாரியார் என்பவர் யார்? அவர் எப்படி உடுப்பியில் கிருஷ்ணரை ஸ்தாபிக்கிறார் என்பதைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்களை இனி பார்ப்போம்!
மத்வரின் குழந்தைப் பருவம்
ஸ்ரீமத் மத்வாச்சாரியார், சுமார் பொ.ஊ.1238-ஆம் ஆண்டு, கர்நாடக மாநிலம், உடுப்பி அருகே உள்ள பாஜக க்ஷேத்திரத்தில் பிறக்கிறார். இவருக்கு பெற்றோர் வைத்த பெயர், வாசுதேவன். வாசுதேவன் பிறந்தது அத்வைத குடும்பத்தில். தனது தாய் – தந்தையினரின் மீது அளவு கடந்த பாசத்தை வைத்தார், வாசுதேவர். அதனால், தாய் – தந்தை என்ன சொன்னாலும் அதை மீறாது உடனே செய்து முடித்துவிடுவார். வாசுதேவரின் குடும்பத்தார், பாஜக க்ஷேத்திரத்தில் மலையின் மீது வசித்து வந்தார்கள். ஒரு முறை வாசுதேவரின் தாய், மலையின் அடிவாரத்தில் இருந்து தனது மகனை அழைக்க, உடனே மலையில் இருந்து கீழே குதித்துவிட்டார். எப்படி மலையில் இருந்து குதித்தான் என்று.. தாய்க்கு ஒரே ஆச்சரியம்! (மலை மேலே இருந்து குதித்த மத்வரின் கால் தடயங்கள் இன்றும் பாஜக க்ஷேத்திரத்தில் காணலாம்).
அதே போல், அம்மி அரைப்பது, சாதம் வெந்துவிட்டதா என்று கையைவிட்டு பார்ப்பது, காய்ச்சின பாலினை மூடுவதற்கு மிக பெரிய கனமான அலுமினிய தட்டினை எடுத்து மூடுவது இப்படி தன்னை அறியாது வாசுதேவன் அசாத்தியமான செயலை செய்ய ஆரம்பித்தார். இதனை கண்ட தாயானவள், தன் பிள்ளைக்கு ஏதோ அமானுஷ்யம் தாக்கிவிட்டதாக எண்ணி, தினம் தினம் வருந்தினார்.
தனது தாய் வருந்துவதை வாசுதேவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தாய் எண்ணுவதுபோல் தனக்கு ஏதோ அமானுஷ்யம் தாக்கிவிட்டதாக வாசுதேவனும் நம்புகிறார். இதற்கு தீர்வு காண திருப்பதி ஏழுமலையானை வேண்டுகிறார், வாசுதேவன். வேங்கடவனின் அருளால், வாசுதேவன் எடுத்த முப்பிறவிகளான அனுமா, பீமா, ஆகியவை நினைவிற்கு வருகிறது. ஆகையால்தான் தனக்கு சிறுவயதிலே இத்தகைய பராக்கிரம பலம் வந்திருக்கிறது என்பதனை வாசுதேவன் அறிகிறார்.
எட்டு வயதில் துறவி
அதுமட்டுமா! வேதங்களும், சாஸ்திரங்களும், புராணங்களும் அவருக்கு நினைவுக்கு வருகிறது. தனது 8வது வயதிலேயே துறவியாகிறார். துறவியானதும் அவருக்கு கொடுக்கப்பட்ட பெயர், “பூர்ணப் பிரக்ஞர்’’. அத்வைதம், விசிஷ்டாத்வைதம் உட்பட 37 மார்க்கத்தை கண்டனம் செய்து, “துவைதம்’’ என்றும் புதிய மார்க்கத்தை உருவாக்கினார். அதிலிருந்து பூர்ணப் பிரக்ஞரை, “ஸ்ரீமத் மத்வாச்சாரியார்’’ என்றும் அழைக்கப்பட்டார். இப்படியாக இருக்க, ஒரு முறை உடுப்பி நகரில் சூறைக்காற்று வீசி பலத்த மழை பொழிகிறது.
இதில், உடுப்பி அருகே இருக்கும் மால்பே கடற்கரையில் கலங்கரை விளக்கம் எது என்று தெரியாது, ஒரு மிக பெரிய ஆங்கிலேயரின் வணிகப் படகு சிக்கிக் கொள்கிறது. அந்த படகு தடுமாறுவதை மத்வாச்சாரியார் கவனிக்கிறார். தனது ஷாட்டியை (காவித் துணியை) எடுத்து தன் தலைக்கு மேலுயர்த்தி வீசுகிறார். அந்த ஷாட்டி, சூரியனை போல் மிக பிரகாசமான ஒளியை தருகிறது.
ருக்மணி பூஜித்த கிருஷ்ணர்
அதை கவனித்த படகோட்டிகள், அதன் ஒளியின் திசையினை நோக்கி படகைச் செலுத்துகிறார்கள். பத்திரமாக படகு கரைக்கு ஒதுங்குகிறது. அதில் பயணித்த ஆங்கிலேயர்கள் அனைவரும் படகில் இருந்து கீழே இறங்கி, மத்வருக்கு நன்றி தெரிவித்து, தாங்கள் வணிகம் செய்வதற்காக படகில் வைத்திருந்த விலை மதிப்பற்ற வைர – வைடூரியங்களை மத்வருக்கு
வழங்குகிறார்கள்.
“இதெல்லாம் எனக்கு வேண்டாம். இதைவிட விலை மதிப்புடைய ஒன்று உங்களிடத்தில் இருக்கிறது, அதுதான் எனக்கு வேண்டும்’’ என்று மத்வாச்சாரியார் பொன் சிரிப்போடு ஆங்கிலேயரிடத்தில் சொல்கிறார். “இந்த வைரங்களைவிட உயர்வானது எது இருக்க முடியும்? உலகில் வைரங்கள் அல்லவா அதிக விலை மதிப்புடையது? இதைவிட எங்களிடத்தில் வேறு எதுவும் இல்லையே?’’ என்று சோகமாக ஆங்கிலேயர்கள், மத்வரிடத்தில் தெரிவிக்க;“அதோ பாருங்கள்…’’ என்று ஒரு கல்லை காட்டுகிறார், மத்வர். “இந்த கல்லா வேண்டும்? இதுவா வைரத்தைவிட மதிப்புடையது?’’ என்று மத்வர் இடத்தில் வினா எழுப்பினர் ஆங்கிலேயர்கள்.
“என் மீது போர்த்தியுள்ள இந்த காவி ஷாட்டி (காவி வஸ்திரம்) உங்களை காப்பாற்றியது என்று வெளி நபர்களிடத்தில் நீங்கள் சொன்னாலே யாரும் நம்பமாட்டார்கள். ஆனால், உண்மை எது என்று உங்களுக்கே தெரியும் அல்லவா! அதுபோலத்தான், அது உங்களுக்கு வெறும் கல். எனக்கு அது, கருமை நிறம்கொண்ட கிருஷ்ணர்’’ என்கிறார் மத்வர். அந்த ஆங்கிலேயர்களுக்கு, கல்லை பார்த்தால் கிருஷ்ணர் போல் தெரியவில்லை. இருந்த போதிலும், மத்வரின் மீது அதீத நம்பிக்கைக் கொண்ட அவர்கள், கல்லினை எடுத்து மத்வரிடத்தில் ஒப்படைக்கின்றார்கள். அதை அவர் பெற்றுக் கொண்டு, ஆங்கிலேயர்களை ஆசீர்வதிக்கிறார்.
(மத்வ மகான்களின் பயணம் தொடரும்…)
ரா.ரெங்கராஜன்