கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே 12 வயது பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மேலும் ஒரு ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளனர். தனியார் பள்ளியில் நடந்த என்சிசி முகாமில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது. பர்கூர் அருகே தனியார் பள்ளியில் ஆக.5 முதல் 9-ம் தேதி வரை நடந்த என்சிசி முகாமில் 17 மாணவிகள் பங்கேற்றனர். 9ம் தேதி அதிகாலை 3 மணிக்கு ஆடிட்டோரியம் சென்ற சிவராமன் சிறுமியை எழுப்பி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் . என்சிசி பயிற்றுநரான காவேரிப்பட்டினம் சிவராமன் வன்கொடுமை செய்தது குறித்து பள்ளி முதல்வரிடம் சிறுமி புகார் அளித்துள்ளார்.
பெரிதுபடுத்த வேண்டாம், உனது பெற்றோர் வேதனை அடைவார் என கூறி பள்ளி முதல்வர் சிறுமியை அனுப்பி வைத்துள்ளார். ஆக.16ம் தேதி உடல்நிலை பாதிக்கப்படவே தனக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை பற்றி பெற்றோரிடம் மாணவி தகவல் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிறுமியை பரிசோதனை செய்தபோது பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானது. புகாரின் அடிப்படையில் பர்கூர் மகளிர் காவல் நிலையத்தில் சிவராமன், பள்ளி முதல்வர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மாணவி பாலியல் வழக்கில் ஏற்கனவே 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது கோமதி என்ற ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார். பள்ளி முதல்வர் சதீஷ்குமார், ஆசிரியர் ஜெனிபர், தாளாளர் சாம்சன் வெஸ்லி, சக்திவேல், சிந்து, சத்யா, சுப்பிரமணி உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்றொரு என்.சி.சி பயிற்சியாளர் சுதாகரை போலீசார் தேடி வருகின்றனர்.