கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 12 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் வந்த ராணுவ வீரர் உயிரிழந்தார். மேலும் 7 பேர் காயமடைந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் மேலுமலை அருகே தனியார் நர்சிங் கல்லூரி எதிரில், ஓசூர் – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை 5 மணியளவில் கார் ஒன்று சென்றுள்ளது. அப்போது முன்னால் சென்ற கன்டெய்னர் லாரி திடீரென வலது பக்கம் திரும்பியதால், அதன்மீது கார் மோதியது. பின்னால் வந்த லாரியும், காரின் பின்புறம் மோதியது. மேலும் அடுத்தடுத்து வந்த 3 லாரிகள், 6 கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக பின்புறம், பக்கவாட்டு பகுதி, சென்டர் மீடியன் தடுப்பு பகுதிகளில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் வந்த வேலூர் மாவட்டம் பொய்கையை சேர்ந்த ராணுவ வீரர் ரவிச்சந்திரன்(47) உயிரிழந்தார். இந்த விபத்தில் காயமடைந்த 7 பேர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். கிரேன் வரவழைக்கப்பட்டு லாரிகள், கார்களை அப்புறப்படுத்தினர். இதன் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 45 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.