கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் கைதான நா.த.க. நிர்வாகி சிவராமன் உயிரிழந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே தனியார் பள்ளியில் என்சிசி முகாம் நடத்தி 8ம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவியை பயிற்சியாளரும், நீக்கப்பட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகியுமான சிவராமன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் அவரால் முகாமில் பங்கேற்ற 13 மாணவிகள் பாலியல் தொந்தரவுக்கு ஆளானார்கள். இதுதொடர்பாக சிவராமன், பள்ளி தாளாளர், பள்ளி முதல்வர், ஆசிரியைகள் உட்பட 11 பேரை பர்கூர் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.
இதனிடையே சிவராமன் வேறு எங்கும் போலியாக என்சிசி முகாம் நடத்தினாரா என்று போலீசார் மாவட்டம் முழுவதும் விசாரணை நடத்தினர். மேலும் யாராவது பாதிக்கப்பட்டிருந்தால் புகார் அளிக்கலாம் என்றும் அறிவித்திருந்தனர். இதனிடையே நேற்று மேலும் ஒரு பள்ளியில் 14 வயது மாணவியை பலாத்காரம் செய்ததாக பரபரப்பு புகார் எழுந்தது. தொடர்ந்து அவர் மீதான பாலியல் வழக்கில் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணையை தொடங்கியுள்ளனர். இதனிடையே கைதுக்கு முன்னரே நாதக முன்னாள் நிர்வாகி சிவராமன், எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனால் கிருஷ்ணகிரியில் இருந்து மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சிவராமன் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிவராமன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
சிவராமன் தந்தையும் உயிரிழப்பு
கிருஷ்ணகிரியில் மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் கைதான சிவராமன் தந்தை அசோக்குமாரும் உயிரிழந்தார். காவேரிப்பட்டினம் திருமண மண்டபம் அருகே மதுபோதையில் கீழே விழுந்து தலையில் அடிபட்டு அசோக்குமார்(61) உயிரிழந்தார். சேலம் மருத்துவமனையில் சிவராமன் உயிரிழந்த நிலையில், அவரது தந்தை அசோக்குமாரும் தலையில் அடிபட்டு உயிரிழந்தார்.