கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் குடும்பத்தகராறில் ராணுவ வீரரின் தாய் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கிருஷ்ணகிரி மாவட்டம் கிட்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சின்னத்துரை (44). கட்டிட மேஸ்திரியான இவரது மனைவி கவுரி (41). இவர்களின் 2 மகள்களுக்கும் திருமணமாகிவிட்டது. ராணுவ வீரரான மகன் விஜி, லடாக்கில் பணிபுரிந்து வருகிறார். தம்பதியர் கிருஷ்ணகிரி அருகே அம்மன் நகர் 2வது கிராசில் ஒரு வீட்டில் போகியத்திற்கு குடி வந்தனர்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக, மனைவி கவுரி பெயரில் டெபாசிட் செய்துள்ள ரூ.20 லட்சத்தை, சின்னத்துரை கேட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஏற்பட்ட தகராறில், கடந்த ஒரு வாரத்திற்கு முன் கவுரி கோபித்துக்கொண்டு, கிருஷ்ணகிரி அருகே மேலேரிக்கொட்டாயில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். கடந்த 2 நாட்களுக்கு முன், அங்கு சென்ற சின்னத்துரை, சமாதானம் பேசி கவுரியை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, பண விவகாரம் தொடர்பாக மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில், ஆத்திரமடைந்த சின்னத்துரை, அங்கிருந்த அரிவாளை எடுத்து கவுரியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில், கழுத்து மற்றும் கை, வாய், தாடை உள்ளிட்ட பகுதிகளில் படுகாயமடைந்த கவுரி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதையடுத்து, சின்னத்துரை அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
நேற்று வெகுநேரமாகியும், வீட்டில் இருந்து யாரும் வெளியே வராததால், அக்கம்-பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்த போது, ரத்த வெள்ளத்தில் கவுரி சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.இதுகுறித்து தகவலறிந்த கிருஷ்ணகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கவுரியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மனைவியை கொன்று விட்டு தலைமறைவான சின்னத்துரையை தேடி வருகின்றனர்.