கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே கந்திகுப்பம் கிராமத்தில் செயல்படும் தனியார் பள்ளியில், கடந்த 5ம் தேதி முதல் 9ம் தேதி வரை என்சிசி முகாம் நடந்தது. அதில் அந்த பள்ளியை சேர்ந்த 17 மாணவிகள் கலந்து கொண்டனர். முகாமில் பங்கேற்ற 8ம் வகுப்பு படித்து வரும் 13 வயது மாணவியை பயிற்சியாளரும், நாம் தமிழர் கட்சி நிர்வாகியுமான சிவராமன் (35) பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
மேலும் 13 மாணவிகள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகியுள்ளனர். இதுகுறித்து பயிற்சியாளர் சிவராமன் உள்பட 11 பேரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். சிவராமன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்ததும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தை தாமாக முன்வந்து மகளிர் ஆணையம் விசாரணைக்கு எடுத்துள்ளது. கிருஷ்ணகிரி பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக குற்றவாளி மீது உரிய பிரிவுகளில் வழக்கு பதிய உத்தரவிட்டுள்ளது. குறிப்பிட்ட காலத்துக்குள் நேர்மையான விசாரணை நடத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தர அறிவுறுத்தியுள்ளது. மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் காவல்துறை, தமிழ்நாடு அரசு 3 நாட்களில் விரிவான அறிக்கை அளிக்கவும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.