கிருஷ்ணகிரி: நாம் தமிழர் கட்சி நிர்வாகியால் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அதனை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வு குழுவினர் இன்று கிருஷ்ணகிரியில் விசாரணை நடத்தினர். முன்னதாக கிருஷ்ணகிரி வந்த சமூக நலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன், காவல்துறை தலைவர் பவானீஸ்வரி, சமூக பாதுகாப்பு ஆணையர் ஜானி தாம் வர்கீஸ், மாவட்ட கலெக்டர் சரயு, மாவட்ட எஸ்பி தங்கதுரை ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது சமூக நலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் கூறியதாவது: மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அந்த தனியார் பள்ளியில் விசாரணை நடத்துவதற்காக நாங்கள் வந்துள்ளோம். யார் யார் குற்றவாளிகள், அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் யார், குற்றத்தை மறைத்தவர்கள் என விசாரணை நடத்தி அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
ஐஜி பவானீஸ்வரி தலைமையில் வந்துள்ள குழுவும் எனது தலைமையில் உள்ள குழுவும் இந்த விசாரணையை நடத்த உள்ளோம். மேலும் பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் அவருடன் இருந்த பாலியல் சீண்டலுக்கு உட்பட்ட மாணவிகள், நெருங்கிய தோழிகள் ஆகியோருக்கு மனநலம் மருத்துவர்கள் உளவியல் ரீதியாக ஆலோசனைகளை வழங்க உள்ளனர். 15 நாட்களுக்குள் அனைத்தையும் முடித்து கொடுக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மேலும், இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஆராய்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவோம். மனநலம் மற்றும் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பது என இரண்டு குழுக்கள் உள்ளது. இந்த குழுவில் குழந்தைகள் நல ஆர்வலர்கள், மனநல மருத்துவர்கள் அதிகளவில் இடம் பெற்றுள்ளனர். இந்த குற்ற சம்பவத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே இதுபோன்ற சம்பவங்கள் யாருக்கேனும் நடந்துள்ளதா என விசாரணை நடத்தப்படும். மேலும் இதுபற்றி மாணவிகளின் பெற்றோர் முன்வந்து தகவல்களை கொடுக்கலாம். இதற்காக தான் 1098என்ற நம்பர் கொடுக்கப்பட்டுள்ளது. பள்ளியில் புகார் பெட்டி உள்ளது. ஆனால் அதனை யாரும் சரியாக உபயோகப்படுத்துவதில்லை. அதனை கட்டாயமாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் இல்லாமல் ஏற்கனவே யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால், நாங்கள் விசாரணையை முடித்துவிட்டு கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள சுற்றுலா மாளிகையில் தான் இரவு 7மணிக்கு மேல் இருப்போம். அதன்பின்னர் எங்களை சந்தித்து தகவல்களை கொடுக்கலாம். அவ்வாறு தெரிவிப்பவர்களின் தகவல்கள் எதையும் தெரிவிக்க மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.