சேலம்: கிருஷ்ணகிரி தனியார் பள்ளியில் நடந்த என்சிசி முகாமில், மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதான நாம் தமிழர் கட்சி மாஜி நிர்வாகி சிவராமன், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று அதிகாலை திடீரென உயிரிழந்தார். இதுதொடர்பாக சேலம் மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தி வருகிறார்.கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில், கடந்த சில நாட்களுக்கு முன் என்சிசி பயிற்சி முகாம் நடந்துள்ளது. பயிற்றுநராக நாம் தமிழர் கட்சி நிர்வாகி சிவராமன் (35) இருந்துள்ளார். அவர், அம்முகாமில் பயிற்சி பெற்று வந்த 8ம் வகுப்பு மாணவியான 13 வயது சிறுமியை, நள்ளிரவு நேரத்தில் தனியாக ஆடிட்டோரியத்திற்கு அழைத்து சென்று, பாலியல் பலாத்காரம் செய்தார்.
இதனை பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்களிடம் மாணவி தெரிவித்த நிலையில், அதனை பெரிதுபடுத்த வேண்டாம் எனக்கூறி மூடி மறைத்துள்ளனர். பிறகு நடந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் மாணவி கூறிய நிலையில், பர்கூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி தங்கதுரை தலைமையிலான போலீசார், நேரடி விசாரணையில் இறங்கி, மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி சிவராமன் மற்றும் குற்றத்தை மறைத்த பள்ளி முதல்வர், தாளாளர், ஆசிரியர்கள் என 11 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
நாம் தமிழர் நிர்வாகி சிவராமனை போலீசார் கைது செய்தபோது, அவர் போலீசில் சிக்காமல் தப்பிக்க முயன்றபோது, கீழே தவறி விழுந்து, வலது காலில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். அப்போது சிவராமன், தன் மீது பாலியல் புகார் வந்தவுடன், அதாவது கடந்த 17ம் தேதியன்று எலி பேஸ்ட் சாப்பிட்டு விட்டதாக மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளார். உடனே சிவராமனை மேல் சிகிச்சைக்காக, சேலம் அரசு மருத்துவமனைக்கு கடந்த 21ம் தேதி மாற்றினர். அங்கு உயர் பாதுகாப்பு பிரிவில் வைத்து, சிவராமனுக்கு அரசு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இதனிடையே, கைதான சிவராமனை, நாம் தமிழர் கட்சியில் இருந்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நீக்கினார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் சிவராமன் மீது 9ம் வகுப்பு படிக்கும் மற்றொரு மாணவி, பாலியல் பலாத்கார புகார் கொடுத்தார். அதன்பேரிலும் போக்சோ வழக்கு பதியப்பட்டது. இதையடுத்து கைதான சிவராமனை சேலம் மத்திய சிறையில் அடைப்பதற்கான நடைமுறையை நேற்று முன்தினம் மதியம் கிருஷ்ணகிரி போலீசார் மேற்கொண்டனர். இதன்மூலம் அவர், மத்திய சிறை விசாரணை கைதியானார். அதனால், சிறை காவலர்கள், சிகிச்சையில் இருக்கும் சிவராமனுக்கு நிழல் காவலாக பணியமர்த்தப்பட்டனர்.
இதனிடையே, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிவராமன், நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உடனே அரசு மருத்துவமனையின் புறக்காவல் நிலைய போலீசாருக்கும் மருத்துவர்கள் தகவல் கொடுத்தனர். அவர்கள், சிறை நிர்வாகத்திற்கும், கிருஷ்ணகிரி மாவட்ட போலீசாருக்கு தகவலை தெரிவித்தனர். இதையடுத்து விசாரணை கைதி சிவராமன் உயிரிழப்பு தொடர்பாக, சேலம் மத்திய சிறை நிர்வாகம் தரப்பில் அஸ்தம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில், இன்ஸ்பெக்டர் தவமணி வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினார்.
விசாரணை கைதி இறந்ததால், சேலம் ஜே.எம்.3 கோர்ட்டிற்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் மாஜிஸ்திரேட் தங்ககார்த்திகா விசாரணையை தொடங்கினார். இறந்த சிவராமனின் உடல், அரசு மருத்துவமனை பிரேதப் பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு வந்த மாஜிஸ்திரேட், சிவராமனின் உடலை பார்த்தார். பிறகு சிவராமனின் அக்கா பிரேமலதா, அண்ணன் சாம்ராஜ், உறவினர்கள் செல்வம், சிந்துபாத் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார். தொடர்ந்து, இறப்பிற்கான காரணம் தொடர்பாக மருத்துவர்களிடமும், போலீஸ் அதிகாரிகளிடமும் மாஜிஸ்திரேட் விசாரித்தார். பின்னர், அவரது முன்னிலையில் வீடியோ பதிவுடன் சிவராமனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பிறகு உடலை உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
* விஷம் சாப்பிட்டது 4 நாட்களுக்கு பிறகே தெரியும்
நாம் தமிழர் கட்சி நிர்வாகி சிவராமனை போலீசார் கைது செய்து, கால் முறிவுக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். அப்போது அவருக்கு வழங்கிய மருந்து, மாத்திரைகள் சரிவர வேலை செய்யவில்லை. இதனால், சந்தேகமடைந்த மருத்துவர்கள், சிவராமனுக்கு வேறு ஏதேனும் பிரச்னை உள்ளதா? என பரிசோதித்துள்ளனர். அப்போது தான், அவரது உடலில் விஷத்தன்மை பரவியிருப்பது தெரிந்துள்ளது. அதுபற்றி சிவராமனிடம் கேட்டபோது, தான் 17ம் தேதியன்றே எலி பேஸ்ட்டை சாப்பிட்டு விட்டதாக தெரிவித்துள்ளார். இதனால், விஷம் சாப்பிட்ட 4 நாட்களுக்கு பிறகே, அதாவது 21ம் தேதி தான், அவர் விஷம் சாப்பிட்டது போலீசாருக்கு தெரியவந்தது.
* போதையில் மொபட்டிலிருந்து கீழே விழுந்து தந்தை பலி
பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைதான நாம் தமிழர் கட்சி நிர்வாகியான சிவராமனின் தந்தை அசோக்குமார் நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில், காவேரிப்பட்டணத்தில் இருந்து காந்தி நகருக்கு மொபட்டில் சென்றார். காவேரிப்பட்டணம்- கிருஷ்ணகிரி சாலையில் உள்ள திருமண மண்டபம் அருகே சென்ற போது, மது போதையில் திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது தலையின் பின்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அவ்வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு, 108ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்தபோது அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில், மொபட்டில் இருந்து கீழே விழுந்த அசோக்குமார் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, மாரடைப்பில் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். அசோக்குமார் நிலைதடுமாறி கீழே விழுந்து பலியாகும் சிசிடிவி காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
* தவறான செய்தி பரப்புவோர் மீது சட்ட ரீதியான கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை
கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி தங்கதுரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சிவராமன் கைது செய்யப்படுவதற்கு 2 நாட்களுக்கு முன்பு, எலி மருந்து உட்கொண்டதாக ஒப்புக்கொண்டார். அவர் எலிமருந்தை உட்கொண்டதை, மருத்துவர்கள் சிவராமனின் மெடிக்கல் டைரியில் குறிப்பிட்டுள்ளனர். சிவராமன் கடந்த 21ம் தேதி மதியம் 12.15 மணியளவில், மேல் சிகிச்சைக்காக சேலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அவருக்கு அன்றைய தினமும், மீண்டும் 22ம் தேதி காலையும் டயாலிசிஸ் சிகிச்சை வழங்கப்பட்டது. இந்நிலையில், நேற்று (23ம்தேதி) அதிகாலை சுமார் 5.30 மணிக்கு, சிவராமன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தனது குடும்ப பிரச்னை காரணமாக, அவர் கடந்த 9ம் தேதி எலி மருந்து சாப்பிட்டு, கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, நேற்று முன்தினம் (22ம்தேதி) இரவு 10.15 மணிக்கு, சிவராமனின் தந்தை அசோக்குமார்(61) தனது மொபட்டில் திம்மாபுரத்தில் இருந்து காவேரிப்பட்டணம் நோக்கி சென்றபோது, தேர்பட்டி என்ற இடத்தில், நிலை தடுமாறி கீழே விழுந்து, தலை மற்றும் தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இது சம்மந்தமாக அவரது மனைவி பத்மா கொடுத்த புகாரின் பேரில், காவேரிப்பட்டணம் போலீசார் வழக்கு பதிவு செய்து, அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அசோக்குமார் மொபட்டில் சென்றபோது, தானாகவே நிலை தடுமாறி கீழே விழுந்து இறந்துள்ளார் என்பது முதற்கட்ட விசாரணையிலும், சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் இருந்தும் தெரிய வருகிறது. எனவே, சிவராமன் மற்றும் அவரது தந்தை அசோக்குமார் இறப்பு குறித்து, ஏதேனும் தவறான செய்தியை பரப்புவோர் மீது, சட்ட ரீதியான கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.