சென்னை: என்சிசி முகாம் நடத்தி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் என்சிசிக்கு எந்த தொடர்பும் கிடையாது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் என்சிசியில் பதிவு செய்த எந்த ஒரு மையமும் பயிற்சி முகாம் நடத்தவில்லை என என்சிசி தலைமை அலுவலகம் விளக்கமளித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் சார்பில் கடந்த 5-ம் தேதி முதல் 9-ம் தேதி வரையில் தேசிய மாணவர் படை (என்சிசி.) முகாம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் பள்ளியைச் சேர்ந்த 17 மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்கள் பள்ளி வளாகத்திலேயே தினமும் தங்கி முகாமில் பங்கேற்றனர்.
இந்த நிலையில், என்சிசி முகாமிற்குச் சென்ற 12 வயதுடைய 8-ம் வகுப்பு மாணவி ஒருவர், கடந்த 8-ம் தேதி அதிகாலை பள்ளி ஆடிட்டோரியத்தில் சக மாணவியருடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அதிகாலை 3 மணி அளவில், என்சிசி பயிற்சியாளரான காவேரிப்பட்டணத்தைச் சேர்ந்த சிவராமன் (30) என்பவர், மாணவியை தனியே அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பாக பயிற்சியாளர், தாளாளர், முதல்வர் உள்பட 9 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் என்சிசியில் பதிவு செய்த எந்த ஒரு மையமும் பயிற்சி முகாம் நடத்தவில்லை என என்சிசி தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது டொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்:
19 ஆகஸ்ட் 2024 அன்று, தமிழ்நாடு, கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் போலி என்சிசி நபர்களால் போலி என்சிசி முகாமில் கலந்துகொள்ளும் பள்ளிச் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் ஊடகங்களில் செய்தியாக வெளியானது.
புகாரளிக்கப்பட்ட சம்பவம் என்சிசியில் பதிவுசெய்யப்பட்ட எந்தவொரு நிறுவனத்திற்கும் பொருந்தாது. குற்றஞ்சாட்டப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய பணியாளர்களுக்கு NCC உடன் எந்த தொடர்பும் இல்லை. மேலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் என்சிசி முகாம் நடத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.