செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த அஞ்சூர் மதுரா தெற்குபட்டு பகுதியில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ராதா ருக்மணி சமேத வேணுகோபால் சுவாமி கோயில் 33ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி உரியடி திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. இதற்கு, முன்னதாக ராதா ருக்மணி சமேத வேணுகோபால சவாமிக்கு திருமஞ்சனம், புஷ்பம் மின் விளக்கு அலங்காரம், மங்கள வாத்தியம், நடைபெற்றது.
இதனை தொடர்ந்து, பரதநாட்டியம், சிலம்பம், களரி, வாணவேடிக்கை, பஜனை மற்றும் அன்னதானம் தெருகூத்து நிகழ்ச்சியும் நடைபெற்றது. உத்திரமேரூர்: உத்திரமேரூர் பஜார் வீதியில் ஸ்ரீவேணுகோபால் சுவாமி கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. இதில், வேணுகோபால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இரவு அலங்கரிக்கப்பட்ட உற்சவர் ஸ்ரீவேணுகோபால் சுவாமி பல்லக்கில் எழுந்தருளி வாணவேடிக்கைகளுடன், மேளதாளங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
பக்தர்கள் வேணுகோபால் சுவாமிக்கு தீபாராதனை காண்பித்தும், தேங்காய் உடைத்தும் சுவாமியை வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து இரவு கோயில் வளாகத்தில் உரியடி நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடந்தது. இதில், ஏராளமான இளைஞர்கள் பங்கேற்று உற்சாகத்துடன் உரியடித்தனர். விழாவிற்கு வந்த பக்தர்கள் தங்கள் குழந்தைகளை கிருஷ்ணர், ராதை வேடத்துடன் அழைத்து வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.