சென்னை: இந்துக்களின் முக்கிய பண்டிகையான கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தியையொட்டி பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அந்த வகையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள். வாழ்க ஸ்ரீ கிருஷ்ணா என குறிப்பிட்டுள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள ஏக்ஸ் தள பதிவில்; விசேஷமான ஜென்மாஷ்டமியில், ஒவ்வொரு பாரதியருக்கும் அன்பான நல்வாழ்த்துக்கள். இந்த மகிழ்ச்சியான திருவிழா, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தெய்வீக மகத்துவத்தையும், ஸ்ரீமத் பகவத் கீதையின் காலத்தால் அழியாத ஞானத்தையும் தழுவுவதற்கு நம்மைத் தூண்டுகிறது.
கர்ம கோட்பாட்டின்படி நடக்கவும் தேச வளர்ச்சிக்காக ஒன்றிணைந்து செயல்படவும் அனைத்து மனிதகுலத்தின் நலன் மற்றும் நல்லிணக்கத்தை முன்னேற்றவும் நமக்குள் உறுதி கொள்வோம் என்று குறிப்பிட்டுள்ளார். பாஜக முன்னாள் மாநிலத்தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த திருநாளில், அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி பெருகிட அனைவருக்கும் இனிய கிருஷ்ணஜெயந்தி நல்வாழ்த்துகள். இந்த இனிய நாளில் அனைவரது வாழ்விலும் அன்பும், அமைதியும், சகோதரத்துவமும், வளமும், ஒற்றுமையும் மேலும் வளர எனது வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன்; பகவான் ஶ்ரீகிருஷ்ணர் அவதரித்த தினமான இன்று, நாட்டு மக்கள் அனைவருக்கும் ஶ்ரீகிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள். பகவத் கீதையின் வழி பகவான் ஸ்ரீகிருஷ்ணர் நமக்கு அளித்துள்ள போதனைகளை ஆழமாக பின்பற்றி, நாட்டில் ஒற்றுமை தழைத்தோங்க செய்து வாழ்வோம் என்று குறிப்பிட்டுள்ளார்.