சென்னை: தொடர் விடுமுறை, முகூர்த்தம், கிருஷ்ண ஜெயந்தி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்து இயக்கப்படும் என்று அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்: வெள்ளிக்கிழமை வரும் 23ம் தேதி முகூர்த்தம், 24ம் தேதி சனிக்கிழமை, 25ம் தேதி ஞாயிற்றுக் கிழமை மற்றும் 26ம் தேதியன்று கிருஷ்ணஜெயந்தி மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு வரும் 23, 24ம் தேதி ஆகிய நாட்களில் சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு வரும் 23ம் தேதி வெள்ளிக் கிழமை மற்றும் 24ம் தேதி சனிக் கிழமை ஆகிய நாட்களில் 485 பேருந்துகளும், மற்றும் 25ம் தேதி ஞாயிற்றுக் கிழமை மற்றும் 26ம் தேதி திங்கள் கிழமை கிருஷ்ண ஜெயந்தி அன்று கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலைக்கு 60 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 23ம் தேதி மற்றும் 24ம் தேதியன்று 70 பேருந்துகளும் மாதாவரத்திலிருந்து 23ம் தேதி மற்றும் 24ம் தேதியன்று 20 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 350 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், திங்கள்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.