*கிருஷ்ணர் வேடத்தில் அசத்திய குழந்தைகள்
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கோயில்களில் நடந்த சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.ஆவணி மாதம் அஷ்டமி திதியில் பகவான் கிருஷ்ணன் அவதரித்தார்.
அதன் அடிப்படையில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமி நாளில் கிருஷ்ண ஜெயந்தியாக இந்துக்களால் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் விரதமிருந்து வழிபட்டு கிருஷ்ணரின் அருளை பெறலாம் என்பது நம்பிக்கை. குழந்தை இல்லாதவர்கள் இந்த நாளில் விரதம் இருந்து தங்கள் விருப்பங்களை நிறைவேற்ற கிருஷ்ணரை வழிபடுவார்கள்.
அதன்படி, நேற்று காலை 9.15 மணி முதல் இன்று காலை 7.30 வரை அஷ்டமி திதி இருக்கிறது. எனவே, அஷ்டமி நாளில் கிருஷ்ணர் ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிருஷ்ணர் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலும், வீடுகளிலும் கிருஷ்ண ஜெயந்தி விழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. வீட்டை சுத்தம் செய்து, அரிசி மாவால் கோலம் இட்டு அழகுபடுத்தினர். மேலும், மாவிலை தோரணங்களால் வீட்டை அலங்கரித்து இருந்தனர். பல்வேறு வீடுகளில் கிருஷ்ணர் சிலை அல்லது படங்களை அலங்கரித்து இருந்தனர்.
மேலும், வீட்டுக்குள் கிருஷ்ணன் நடந்து வருவதுபோல கோலமிட்டும், சீடை, முறுக்கு, அப்பம் உள்ளிட்ட பலகாரங்களோடு அவல், வெண்ணெய் உள்ளிட்டவற்றை நிவேதனம் செய்தும் வழிபட்டனர். வீடுகளில் உள்ள குழந்தைகளை கண்ணனாகவும், ராதையாகவும் அலங்கரித்து அவர்களுக்கு பட்சணங்களை கொடுத்து வழிபட்டனர். ஏராளமான மக்கள் அரிசி மாவினை தண்ணீரில் கலந்து, அதனை கிருஷ்ணரின் கால் பாதங்கள் போன்று வீட்டினுள் அச்சாக வைத்து, தங்களுடைய வீட்டிற்கு கிருஷ்ணரே வந்ததாக பாவித்து மகிழ்ந்தனர். மேலும், கோயில்களில் உறியடி திருவிழாக்களும் நடத்தப்பட்டது.
கீழ்பென்னாத்தூர்: கீழ்பென்னாத்தூர் அடுத்த மேக்களூர் கிராமத்தில் நவநீத கோபாலகிருஷ்ணன் கோயில் உள்ளது. கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு இக்கோயிலில் நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனை நடந்தது.
பின்னர், கோபாலகிருஷ்ணன் கோயிலில் இருந்து 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக ெசன்றனர். அப்ேபாது, பஜனை பாடல்கள் பாடியும், கோலாட்டம் ஆடியபடியும், சிறுவர்கள் கிருஷ்ணர் வேடமிட்டபடியும் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து கோயிலை அடைந்தனர். தொடர்ந்து, நவநீத கோபாலகிருஷ்ணனுக்கு பால் அபிஷேகம் செய்தனர்.
பின்னர், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமியை மேக்களூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.போளூர்: கிருஷ்ணர் ஜெயந்தியை முன்னிட்டு 13ம் ஆண்டு உறியடி திருவிழா போளூர் யாதவர் பண்பாட்டு கழகம் சார்பில் நேற்று நடந்தது.
முன்னதாக வேணுகோபால சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனை நடந்தது. தொடர்ந்து, சம்பத்கிரி குழுவினரின் பஜனை நடந்தது. பேரூராட்சி துணைத்தலைவர் சாந்தி நடராஜன் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். பின்னர், மாலையில் இளைஞர்கள் கலந்து கொண்டு உறியடி திருவிழாவை நடத்தினர். உறியடியில் சிறப்பாக பானை உடைத்த இளைஞர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இரவு நகைச்சுவை பட்டிமன்றம் நடந்தது.
சேத்துப்பட்டு: சேத்துப்பட்டு பழம்பேட்டையில் உள்ள கிருஷ்ணர் கோயிலில் நேற்று கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனை நடந்தது. பின்னர், கிருஷ்ணர் சிறப்பு அலங்காரத்தில் மேளதாளத்துடன் திருவீதியுலா வந்து அருள்பாலித்தார். தொடர்ந்து, பாலமுருகன் தெருவில் உறியடி திருவிழா நடந்தது. உறியடித்து, சரக்கு மரம் ஏறி வெற்றி பெற்ற இளைஞர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் கிருஷ்ணன், ராதை வேடம் அணிந்து குழந்தைகள் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை பழம்பேட்டை யாதவ மகா சபையினர் செய்தனர். இதேபோல், செஞ்சி சாலையில் உள்ள ராதாகிருஷ்ணன் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.
கலசபாக்கம்: கலசபாக்கம் அடுத்த சிறுவள்ளூர் கிராமத்தில் உள்ள கனகவல்லி செங்கல் நாராயண பெருமாள் கோயில், கேட்டவரம்பாளையம், பாடகம், பட்டியந்தல் உட்பட பல்வேறு கிராமங்களில் உள்ள பெருமாள் கோயில்களில் அதிகாலை நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனை நடந்தது.
தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் உற்சவமூர்த்தி திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர், நேற்று மாலை நடந்த உறியடி திருவிழாவில் திரளான இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். மேலும், பாடகம் கிராமத்தில் பால்குடங்களை ஏந்தி பெண்கள் ஊர்வலமாக கொண்டு சென்று சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர்.வந்தவாசி: வந்தவாசி யாதவ மகாசபை சார்பில் கிருஷ்ண ஜெயந்தி உறியடி விழா மற்றும் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இதையொட்டி, பெருமாள் கோயிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சுவாமி ஊர்வலமாக புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்றது. பின்னர், கோயில் வளாகத்தில் உறியடி விழா நடந்தது. அதேபோல் நெமந்தகார தெரு, எள்ளுப்பாறை, பால் உடையார் தெரு ஆகிய இடங்களில் உறியடி விழாவும், யாதவர் தெருவில் சறுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில், இளைஞர்கள் உற்சாகத்துடன் பங்கேற்று பரிசுகளை வென்றனர். மேலும், யாதவர் தெருவில் தொடர்ந்து அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி வந்தவாசியில் உள்ள தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் கிருஷ்ணர், ராதை உட்பட பல்ேவறு வேடங்கள் அணிந்து புதிய பஸ் நிலையம் சாலை, தேரடி, சன்னதி தெரு, கே.ஆர்.கே.உடையார் தெரு உட்பட முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர். இது பொதுமக்களை பெரிதும் கவர்ந்தது.