நன்றி குங்குமம் தோழி
தீபாவளி, கிருஷ்ண ஜெயந்தி போன்ற பண்டிகைகள் என்றாலே வீடே அமர்க்களப்படும். ஒரு பக்கம் பாட்டி பலகாரத்திற்கு தேவையான பொருட்களை தயார் செய்ய, அம்மா, அத்தை, பெரியம்மா எல்லோரும் சேர்ந்து அதனை தயார் செய்வார்கள். அவர்கள் கைமணத்தில் தயாராகும் பலகாரங்களின் சுவைக்கு ஈடு இணையே கிடையாது. தற்போது அனைத்து கடைகளிலும் இந்தப் பலகாரங்கள் கிடைத்தாலும், இவர்களின் கைமணத்திற்கு என தனிச் சுவை இன்று வரை இருக்கத்தான் செய்கிறது.
காலப்போக்கில் இது போல் கூட்டுக் குடும்பமாக பலகாரங்கள் செய்யும் பழக்கம் மறைந்துவிட்டது. அதற்கு முக்கிய காரணம் இன்று பலகாரங்களை வீட்டில் செய்ய பெண்களுக்கு நேரம் இல்லை. மேலும் அனைத்தும் கடைகளில் விற்பனைக்கு கிடைக்கிறது. இன்ஸ்டன்டாக கிடைக்கும் போது, நாம் ஏன் அதற்காக நேரத்ைத செலவு செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். என்னதான் கடைகளில் கிடைத்தாலும், அதில் நம் பாட்டியின் அன்பும் கைமணமும் கலந்திருக்காது.
அவற்றுக்காக ஏங்குபவர்களுக்காகவே இப்போது பாட்டிகள் சிலர் தங்கள் வீட்டில் இருந்தே இது போன்ற பலகாரங்களை அதே அன்புடன் ஆர்டரின் பேரில் சமைத்து தருகிறார்கள். நாம் விரும்பும் பலகாரங்களை அவர்களின் இணையத்தில் ஆர்டர் செய்தால் போதும், அதனை நம் வீட்டிற்கே அனுப்பி வைக்கிறார்கள். அதில் மிகவும் பிரபலமானவர்கள் கிரிஜா பாட்டி மற்றும் ஜானகி பாட்டி. இவர்களின் பலகாரங்கள் உலகம் முழுதும் ஆன்லைனில் விற்பனையாகி வருகிறது. அவர்களைப் பற்றி ஒரு சிறு கண்ணோட்டம்.
‘‘ஒன்பது வருடங்களுக்கு முன் ஜானகி பாட்டியால் துவங்கப்பட்டதுதான் ‘ஸ்வீட் காரம் காபி’. மழை பொழிந்த மாலை வேளையில் சொந்தங்களுடன் அமர்ந்து கதை பேசிக் கொண்டிருந்தனர் அந்த குடும்பத்தின் இளைய தலைமுறையினர். மழை என்றாலே சூடாக ஏதாவது கொறிக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்படும். உணவுப்பிரியர்களான இவர்களுக்கு சூடாக முறுக்கு சாப்பிட வேண்டும் என்று தோன்றியுள்ளது. கடைகளில் அவர்கள் தேடிய பாரம்பரியமான தென்னிந்திய முறுக்குகள் கிடைக்கவில்லை.
வீட்டில் பாட்டி, பெரியம்மா, அம்மா, சித்தி, அத்தை அனைவரும் சமையலில் வல்லுனர்கள். அப்படிப்பட்ட பாரம்பரிய உணவுக் குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு அன்று சுவைக்க முறுக்கு கிடைக்காத ஏக்கம்தான் இவர்களை பலகார நிறுவனம் ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டி இருக்கிறது. மேலும் தங்கள் வீட்டில் உள்ள ஹோம் செஃப்களுக்கு இது ஒரு நல்ல பிளாட்பார்மாக அமையும் என்று நினைத்தார்கள்.
தங்கள் பாட்டி மற்றும் அம்மாக்களின் பழங்கால பலகார ரெசிபிக்களை தூசித் தட்டி அதே பாரம்பரிய முறையில் தயாரித்து மக்களுக்கு கடந்த ஒன்பது வருடமாக அளித்து வருகிறார்கள். தென்னிந்திய ஸ்னாக்ஸ், இனிப்புகள், பில்டர் காபி, அப்பளம் வத்தல் வகைகள், ஊறுகாய், மசாலா மற்றும் பொடி வகைகள் என அனைத்தும் இவர்களிடம் உள்ளது. குறிப்பாக கிருஷ்ண ஜெயந்தி, தீபாவளி, ரக்ஷாபந்தன் பண்டிகைகளுக்கு ஏற்ப சிறப்பு பலகாரங்களும் வழங்குகிறார்கள். இந்த வருட கிருஷ்ண ஜெயந்திக்கு கை முறுக்கு, உப்பு மற்றும் இனிப்பு சீடை, அதிரசம், ஸ்பெஷல் மிக்சர், ரிப்பன் பக்கோடா, பட்டர் முறுக்கு, கோதுமை அல்வா போன்றவை இவர்களின் ஸ்பெஷல்.
கிரிஜா பாட்டிக்கு 18 வயதில் திருமணம். கல்யாணம் வரை சமையல் அறைக்குள்ளே நுழையாதவர். சமைக்கவும் தெரியாது. தற்ேபாது 72 வயதாகும் கிரிஜா பாட்டி, உலகம் முழுக்க தன்னுடைய சுவையான உணவினால் பலரை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவரின் ‘கிரிஜா பாட்டி ஃபுட்ஸ்’ நிறுவனம் பல வகை பலகாரங்கள், ஊறுகாய், பொடி மற்றும் மிக்ஸ் வகைகள், பாரம்பரிய இனிப்புகள் என பல சுவையான உணவினை வழங்கி வருகிறது.
அம்மா மற்றும் மாமியாரிடம் சமையல் பயிற்சி பெற்றவர், தன் 50 வருட சமையல் அனுபவங்களை மக்களுக்கு சுவையாக வழங்கி வருகிறார். இவரின் குடும்பத்தில் உள்ளவர்கள் படிக்கவும், வேலை பார்க்கவும் மற்ற மாநிலங்கள் மற்றும் வெளிநாடு சென்றதால், அவர்களுக்காக மிக்ஸ், பலகாரங்கள், ஊறுகாய் போன்றவற்றை சமைத்து வழங்கியுள்ளார். கோவிட் காலத்தில் அவருக்கு தெரிந்த குடும்பங்களில் உள்ள ஆண்களுக்கு வேலை இல்லாமல் போனது.
அந்த வீட்டுப் பெண்களுக்கு ஒரு வாழ்வாதாரம் ஏற்படுத்தி தருவதற்காக தான் இந்த நிறுவனத்தை துவங்கினார். தற்ேபாது ஒவ்வொரு பண்டிகையின் போதும் 2000க்கும் மேற்பட்ட ஆர்டர்கள் சப்ளை செய்து வருகிறார். இன்னும் பத்து வருடத்தில் இப்போது இருக்கும் சக்தி இருக்காது என்றாலும் தன் கடைசி காலம் வரை ஓய்வு பெற விருப்பம் இல்லை என்று கூறும் கிரிஜா பாட்டி இந்த வருட கிருஷ்ண ஜெயந்திக்கு இரண்டு வகை சீடை, தட்டை, அதிரசம், கை முறுக்கு, பட்ட முறுக்கு, பட்டர் மாலாடு, பட்டர் பக்கோடா போன்றவற்றை ஆர்டரின் பேரில் வழங்கி வருகிறார்.
தொகுப்பு: ரிதி