நெல்லை: நெல்லை குறுக்குத்துறை முருகன் கோயில் சுமார் 950 ஆண்டுகள் பழமையானது என மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொல்லியல் மாணவி ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. தாமிரபரணி ஆற்றுப்படுகையில் உள்ள நெல்லை டவுன் குறுக்குத் துறை முருகன் கோயில் பிரசித்திப் பெற்றது. ஆற்றில் வெள்ளம் வரும்போது இக்கோயில் தண்ணீருக்குள் மூழ்கிவிடும். இருப்பினும் பல நூறு ஆண்டுகளாக குறுக்குத்துறை முருகன் கோயில் கம்பீரமாக காட்சியளிக்கிறது. இந்தக் கோயில் சுமார் 300 ஆண்டுகள் பழமையானது என பொதுவாக நம்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முதுகலை தொல்லியல் 2ம் ஆண்டு படிக்கும் மாணவி மீனா, இக்கோயிலை தொல்லியல் ஆராய்ச்சி செய்தார். அப்போது கோயில் அருகே 2 கல்வெட்டுக்களை அடையாளம் கண்டார். சக மாணவிகளான சுகன்யா, பாரதி, ராணாவுடன் இந்த கல்வெட்டுக்களை அவர் படி எடுத்தார். கோயில் அருகே படித்துறையில் உள்ள இக்கல்வெட்டின் மேல் பகுதியில்தான் முருகன் கோயிலின் படித்துறை மண்டபம் கட்டப்பட்டு உள்ளது. இந்த கல்வெட்டின் ஒரு பகுதி, இங்குள்ள மண்டபத்தின் தூணுக்கு அடியில் உள்ளது.
இதனால் இந்த கல்வெட்டின் ஒரு பகுதி மட்டுமே படிக்க கிடைத்ததாக தொல்லியல் மாணவி மீனா தெரிவித்தார்.
அதில், “…ண்டு கடமைக்குத்.. மக்களுக்கும் பி…. …க்கும் சை…..ளுக்கு அச்சு.. ங்கள் கைய கங்…’’ என்ற ஆறு வரி தகவல்கள் தற்கால தமிழ் எழுத்தில் பொறிக்கப்பட்டு உள்ளது. இது ஒரு முற்று பெறாத கல்வெட்டு என்றும், எழுத்தின் வடிவத்தின் அடிப்படையில் இக்கல்வெட்டு 950 ஆண்டுகள் பழமையானது என்றும், தொல்லியல் உதவி பேராசிரியர்கள் முருகன் மற்றும் மதிவாணன் தெரிவித்தனர். மேலும் இதை உறுதிபடுத்தும் வகையில் குறுக்குத்துறை முருகன் கோயிலின் உள்ளே உள்ள மண்டப தூண்கள் மற்றும் சுவர்ப் பகுதியில் பல வகையான கட்டிடக்கலை அங்கங்கள் மற்றும் அமைப்புகள் இருப்பது தொல்லியல் மாணவியின் ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.
இக்கல்வெட்டும் கட்டிடக்கலை அங்கங்களும் இந்தக் கோயில் 950 ஆண்டுகள் பழமையானது என உறுதிப்படுத்துவதாக தொல்லியல் போராசிரியர்கள் தெரிவித்தனர். இதுபோல் இக்கோயிலில் இருந்து 500 மீட்டர் தொலைவில் சிதிலமடைந்த ஒரு மண்டபத்தில் இருந்த இன்னோரு கல்வெட்டை தொல்லியல் மாணவியர் படியெடுத்தனர்.
அதில், “பிலம்பலும் இரண்டு நாதவ வாய்களுக்குக் கிழக்கு
ல்லை இகுலங்களில் நீர் நக்க
ல்லை இந்தபாரையின் நீரை அம்மடை
மடத்துத் திருவேங்கடம் எல்லை”- என குறிப்பிடப்பட்டுள்ள கல்வெட்டு ஆற்றுத் தண்ணீரைப் பிரித்து மடை மூலம் கொண்டு செல்வதை விளக்குகிறது. இதுவும் ஒரு முற்றுப் பெறாத கல்வெட்டு. இதுவும், 950 ஆண்டு பழமையான கல்வெட்டு என உதவி பேராசிரியர்கள் முருகன், மதிவாணன் ஆகியோர் தெரிவித்தனர். இந்த தொல்லியல் ஆராய்ச்சியில் ஈடுபட்ட மாணவியையும், அதற்கு உதவி செய்த பேராசிரியர்களையும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர் பாராட்டினார்.
ஆராய்ச்சி தொடரும்…
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொல்லியல் துறை தலைவர் (பொறுப்பு) சுதாகர் கூறுகையில், “இத்தகைய பெருமையைப் பெற்ற குறுக்குத்துறை கோயிலின் கட்டிக்கலை மேலும் ஆய்வு செய்ய வேண்டும். இந்தக் கட்டிடக் கலை நுட்பத்தை உலகறிய செய்ய வேண்டும் என்ற முனைப்பில் பல்கலைக்கழக தொல்லியல் துறை ஈடுபட்டு வருகிறது. தொடர்ந்து தொல்லியல் மாணவ- மாணவிகள் இதுதொடர்பாக ஆராய்ச்சி செய்வார்கள்’’ என்றார்.
1000 ஆண்டுகள் பழமையான கருவறை
பேராசிரியர்கள் முருகன், மதிவாணன் கூறுகையில், ‘‘குறுக்குத்துறை முருகன் கோயிலின் கருவறை ஒரு பாறையைக் குடைந்து அதில் சிலை வடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயிலின் மண்டபமே 950 ஆண்டுகள் பழமையானது என்று கண்டறியப்பட்ட நிலையில், கருவறை ஆயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்டது எனக் கணிக்க முடிகிறது. ஆயிரம் ஆண்டுகளாக இக்கோயில் தாமிரபரணி ஆற்று வெள்ளத்தைத் தாக்குப் பிடித்து நிற்கிறது. அதாவது சுமார் 1000 ஆண்டுகள் வெள்ளப் பெருக்கை இந்தக் கோயில் தாக்குப் பிடித்துள்ளது.’’ என்றனர்.