திருவனந்தபுரம்: கோழிக்கோடு விமானநிலையம் அருகே நேற்று 2 வாலிபர்கள் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிக் கொண்டிருந்தனர். இதை கவனித்த போலீசார் அவர்களைப் பிடித்து விசாரித்தனர். இதில் பாங்காக்கில் இருந்து அபுதாபி வழியாக ஒருவர் உயர் ரக கலப்பின கஞ்சாவை கடத்தி வருவது தெரியவந்தது. கஞ்சாவை வாங்குவதற்காகவே வாலிபர்கள் இருவரும் விமானநிலையத்திற்கு வந்திருந்தனர். விசாரணையில் அவர்கள் கண்ணூர் அருகே உள்ள மட்டனூர் பகுதியை சேர்ந்த ரிஜில் (35) மற்றும் தலச்சேரியை சேர்ந்த ரோஷன் (33) என்று தெரியவந்தது.
விசாரணைக்குப் பின் இருவரையும் போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே போலீசார் நடத்திய விசாரணையில் கஞ்சாவை கடத்தி வந்த நபர் விமானநிலையத்தை விட்டு டாக்சியில் புறப்பட்டு சென்றது தெரியவந்தது. போலீஸ் காரை துரத்தியதை அறிந்த அந்த நபர் சிக ரெட் பிடிக்க வேண்டும் என்று கூறி டாக்சியை நிறுத்தி தப்பிவிட்டார். சிறிது நேரத்தில் அந்த இடத்திற்கு வந்த போலீசார் காரில் நடத்திய சோதனையில் 18 கிலோ உயர் ரக கலப்பின கஞ்சா கைப்பற்றப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 9 கோடி ஆகும். கஞ்சா கடத்திய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.