சென்னை: கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பிற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில இருந்து வரத்து அதிகரிப்பால், தக்காளி விலை சரிந்துள்ளது. ஒரு கிலோவுக்கு ரூ.50 குறைந்து ரூ.150க்கு விற்பனையானது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த மாதம் முழுவதும் தக்காளி விலை அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன் ஒரு கிலோ தக்காளி ரூ.200, பொடி தக்காளி ரூ.120க்கும் விற்றது. நாளுக்குநாள் தக்காளி விலை உயர்ந்து வந்ததால் பொதுமக்கள் 100 கிராம், 250 கிராம் என வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்நிலையில், தக்காளியின் விலையை குறைக்க தமிழக அரசு எடுத்த ந டவடிக்கையால் பொதுமக்களுக்கு ரேஷன் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இந்நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நேற்று காலை 33 வாகனங்களில் 450 டன் தக்காளி வந்தது. இதனால் ரூ.200க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளி ரூ.150க்கு விற்பனையானது. ரூ.120க்கு விற்பனை செய்யப்பட்ட பொடி தக்காளி ரூ.90க்கு விற்பனையானது. இதுகுறித்து, கோயம்பேடு மார்க்கெட் சிறு மொத்த வியாபாரிகளின் சங்க தலைவர் எஸ்.எஸ்.முத்துகுமார் கூறும்போது, ‘‘கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளி கூடுதலாக வந்துள்ளது. இதன்காரணமாக, தக்காளி விலை குறைந்துள்ளது. இன்னும் 10 நாளுக்கு தக்காளி விலையில் ஏற்றம் இறக்கமாகத்தான் இருக்கும். தமிழ்நாடு அரசு அதிரடி முயற்சியால் பல வழிகளில் தக்காளியின் விலை குறைக்க ஏற்பாடு செய்துள்ளது. இதன் விலை படிப்படியாக மீண்டும் குறையும்’’ என்றார்.
* மல்லி ஒரு கிலோ ரூ.900
கோயம்பேடு பூ மார்க்கெட்டில், ஆடிப்பெருக்கு மற்றும் ஆடி வெள்ளி 3ம் நாளை முன்னிட்டு பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நேற்று காலை ஒரு கிலோ மல்லி ரூ.900க்கு விற்கப்பட்டது. கனகாம்பரம் ரூ.800, ஐஸ் மல்லி, ஜாதிமல்லி, முல்லை ரூ.500, சாமந்தி, சம்பங்கி ரூ.200, அரளி பூ ரூ.250 பன்னீர்ரோஸ் ரூ.100 சாக்லேட் ரோஸ் ரூ.120க்கும் விற்கப்பட்டது. கோயம்பேடு பூ மார்க்கெட் நிர்வாக குழு தலைவர் முத்துராஜ் கூறுகையில், ‘‘கோயம்பேடு மார்க்கெட்டில் ஆடிப்பெருக்கு முன்னிட்டு அனைத்து பூக்களின் விலை உயரும் என்பது எதிர்பார்த்ததுதான். ஆனால் அனைத்து பூக்களையும் குறைந்த விலையில் விற்பனை செய்து வந்தோம். நேற்று காலை மார்க்கெட்டில் ஆடிப்பெருக்கு, ஆடி வெள்ளி 3ம் நாளை முன்னிட்டு பூக்களின் விலை 2 மடங்கு உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு தொடர்ந்து 3 நாள் நீடிக்கும்’’ என்றார்.