அண்ணாநகர்: கோயம்பேடு உணவு தானிய அங்காடி வளாகத்தில், வியாபாரிகளுக்கான விபத்தில்லா நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி, சென்னை பெருநகர போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் சுதாகர் தலைமையில் நேற்று நடந்தது. இதில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா மற்றும் கோயம்பேடு மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜி.டி.ராஜசேகரன் மற்றும் முத்துராஜ் மற்றும் முத்துகுமார் ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், போக்குவரத்து காவல்துறை, வியாபாரிகள் இணைந்து உருவாக்கிய விபத்தில்லா நாள் என்ற வாசகம் அடங்கிய பையை கூடுதல் ஆணையர் சுதாகர், விக்கிரமராஜா ஆகியோர் வெளியிட்டனர். பின்னர், சாலை பாதுகாப்பு குறித்து வியாபாரிகளுக்கு விளக்கப்பட்டது.
இதையடுத்து, போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ஆகஸ்ட் 26ம் தேதி விபத்தில்லா நாளாக மாற்ற வேண்டும் என்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக அனைத்து தரப்பினருக்கும் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது,’’ என்றார். நிகழ்ச்சியில், போக்குவரத்து காவல் துணை ஆணையர் பாஸ்கர், உதவி ஆணையர் ரவி, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சுந்தரம், ஜெயராம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.