அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 4 ஆயிரத்துக்கு மேற்பட்ட கடைகள் இயங்கி வருகிறது. மார்க்கெட் முழுவதும் 94 கழிவறைகள் உள்ளன. காய்கறி, பூக்கள், பழம் மார்க்கெட்டில் 68 கழிவறைகள் மற்றும் 10 சிறுநீர் கழிப்பிடங்கள் உள்ளன. உணவு தானிய மார்க்கெட்டில் 26 கழிப்பிடங்கள் கட்டணமில்லாத கழிப்பிடங்களாக உள்ளன. ஆனால், காய்கறி, பழம் பூ மார்க்கெட்டில் உள்ள கழிப்பிடங்களில் தனியார் ஒப்பந்ததாரர்கள் மூலம் 10 மற்றும் 5 ரூபாய் வீதம் கட்டணம் வசூலிக்கின்றனர். இதுதவிர குளிப்பதற்கு 30 ரூபாய் கட்டணம் வசூலித்து வருகின்றனர். கோயம்பேடு உணவு தானிய மார்க்கெட்டில் மட்டும் கட்டணமில்லாத கழிவறைகள் செயல்பட்டு வருகிறது. காய்கறிகள், பூக்கள், பழம் ஆகிய மார்க்கெட் வளாகத்திலும் கட்டணமில்லாத கழிப்பிடங்கள் செயல்பட வேண்டும்’’ வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதுசம்பந்தமாக கடந்த 2 மாதத்துக்கு முன்பு அறநிலையத்துறை அமைச்சரும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தலைவருமான பி.கே.சேகர்பாபு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் உள்ள 68 கழிப்பிடங்கள் கட்டணமில்லாத கழிப்பிடமாக மாற்றப்படும் என்று முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து மார்க்கெட் வளாகத்தில் உள்ள கழிப்பிடத்தில் இனிமேல் கட்டணம் வசூலிப்பது தடை செய்யப்படுகிறது. விரைவில் கழிப்பிடத்தை வியாபாரியிடம் ஒப்படைத்து இலவசமாக பயன்படுத்த வேண்டும்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்காடி நிர்வாகத்துக்கு வியாபாரிகள் மற்றும் பூ மார்க்கெட் துணை தலைவர் முத்துராஜ் நன்றி தெரிவித்தனர்.