அண்ணாநகர்: கோயம்பேடு பூ மார்க்கெட்டில் மல்லி, ஐஸ் மல்லி, ஜாதிமல்லி முல்லை பூக்களின் விலை உயர்ந்துள்ளது. சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட்டில் இன்று காலை மல்லி, ஐஸ் மல்லி, ஜாதிமல்லி முல்லை ஆகிய பூக்களின் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ மல்லி 800க்கும் ஐஸ் மல்லி 600க்கும் ஜாதிமல்லி முல்லை 400க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கனகாம்பரம் 300க்கும் சாமந்தி 20க்கும் சமங்கி 30க்கும் சாக்லேட் ரோஸ் 40க்கும் பன்னீர் ரோஸ் 30க்கும் அரளி பூ 80க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை புறநகர் கடைகளில் ஒரு கிலோ மல்லி 1,000க்கும் ஐஸ் மல்லி 800க்கும் ஜாதிமல்லி, முல்லை 600க்கும் கனகாம்பரம் 500க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து இல்லதரிசிகள் கூறும்போது, ‘’கோயம்பேடு மார்க்கெட்டில் விசேஷ நாட்கள், முகூர்த்த நாள் இல்லாத நிலையில் அனைத்து பூக்களும் குறைந்த விலையில் வியாபாரிகள் விற்பனை செய்துவந்தனர். இன்று காலை மல்லி, முல்லை, ஜாதிமல்லி, ஐஸ் மல்லி விலை உயர்ந்துள்ளது. சென்னை புறநகர் கடைகளில் இரண்டு மடங்கு விலையில் விற்பனை செய்கின்றனர்’ என்றனர்.
கோயம்பேடு பூ மார்க்கெட் நிர்வாக குழு தலைவர் முத்துராஜ் கூறும்போது, ‘’கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த இரண்டு வாரமாக விசேஷ நாட்கள், முகூர்த்த நாட்கள் இல்லாத நிலையில் அனைத்து பூக்களும் குறைந்த விலையில் விற்பனை செய்து வந்தனர். சென்னை மற்றும் வெளிமாவட்டங்களில் மழை பெய்து வருவதால் வரத்து குறைந்து மல்லி, முல்லை, ஜாதிமல்லி, ஐஸ் மல்லி விலை உயர்ந்துள்ளது. மற்ற பூக்களின் விலை சரிந்துள்ளது. வருகின்ற 14ம் தேதி அமாவசையை முன்னிட்டு அனைத்து பூக்களின் விலை உயர வாய்ப்புள்ளது’ என்றனர்.