அண்ணாநகர்: சென்னை சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அபராதம் விதித்து மாடுகளின் காதில் டேக் போடும் படி சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, சாலையில் சுற்றி தெரியும் மாடுகளை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து அபராதம் விதித்து வருகின்றனர். இந்த நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டில் 100க்கும் மேற்பட்ட மாடுகள் சுற்றிவந்ததால் வியாபாரிகள், பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
இந்த மாடுகளை பிடிக்கவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்ததுடன் அங்காடி நிர்வாக அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து அங்காடி நிர்வாகம் சார்பில், மாடுகளை பிடித்து அபராதம் விதித்துவரும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.நேற்று மார்க்கெட்டில் சுற்றித் திரிந்த 62 மாடுகளை பிடித்து சென்றனர். இதன்பின்மாட்டின் உரிமையாளர்கள் அங்காடி நிர்வாகம் அலுவலகம் வந்து மாடுகளுக்கு 30 ஆயிரம் அபராதம் கட்டி மாடுகளை மீட்டு சென்றனர்.
‘’இனிமேல் மாடுகள் மார்க்கெட்டில் வராது’’ என்று சொல்லிவிட்டு அவர்களது மாடுகளை அழைத்து சென்றனர்.இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘’கோயம்பேடு மார்க்கெட்டில் தினமும் 100க்கும் மேற்பட்ட எருமை, பசுமாடுகள் சுற்றி வருகின்றன. மார்க்கெட்டுக்கு மாடுகள் வருவது குறித்து பலமுறை சென்னை மாநகராட்சி அதிகாரியிடம் கூறியுள்ளோம். மாடுகள் திடீரென்று சண்டைபோட்டுகொண்டு ஓடும்போது காய்கறி வாங்க வருகின்ற பெண்கள் பயத்தில் அலறியடித்து ஓடுகின்றனர். இவ்வாறு ஓடும்போது சிலர் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே, மார்க்கெட்டில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து அபராதம் விதித்து வரும் பணிகளை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும்’ என்றனர்.