சென்னை: சென்னையில் உள்ள பார் ஒன்றில், கியூஆர் ஸ்கேனர் மூலம் ரூ.5 லட்சம் வரை மோசடி செய்த ஊழியர்கள் 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோயம்பேட்டில் உள்ள ஓட்டல் ஒன்றில், மதுபான பார் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு வரும் வாடிக்கையாளர்கள் ஜிபே மூலம் பணம் செலுத்துவது வழக்கம்.
இந்நிலையில், மதுபான பாரின் வரவு, செலவு கணக்குகளை சமீபத்தில் சரிபார்த்தபோது, லட்சக்கணக்கில் பணம் மாயமானது தெரியவந்தது. விசாரணையில், மதுபான பாரில் பணியாற்றி வந்த வடமாநிலத்தை சேர்ந்த 3 ஊழியர்கள், கடந்த 6 மாதங்களாக, வாடிக்கையாளர்களிடம், ஓட்டல் நிர்வாகத்தின் க்யூஆர் ஸ்கேனரை காண்பிக்காமல், தங்களது க்யூஆர் ஸ்கேனரை காண்பித்து, ரூ.5 லட்சம் வரை மோசடி செய்தது தெரியவந்தது.
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், பார் ஊழியர்களான ரெம்னன்சங், லுங்கோஜங், பாகோமாங் ஆகிய 3 ஊழியர்கள் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், கோயம்பேடு போலீசார், மோசடியில் ஈடுபட்ட 3 ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.