அண்ணாநகர், ஆக.12: கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில், வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் நலன் கருதி, ரூ.86 லட்சம் மதிப்பில் நவீன மருத்துவமனை கட்டுமான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதில், காய்கறி, பழங்கள், பூக்கள் மற்றும் மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இங்குள்ள கடைகளில் வியாபாரிகள் மற்றும் தொழிலாளிகள் என 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர்.
இவர்கள் பயன்பெறும் விதமாக நவீன வசதிகளுடன் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதன்பேரில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், இதற்காக ₹20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, நவீன மருத்துவமனை அமைப்பதற்கான கட்டுமான பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், பொது மருத்துவம், தீவிர சிகிச்சை பிரிவுகள் இயங்க உள்ளது. விரைவில் புதிய மருத்துவமனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மார்க்கெட் தொழிலாளிகள் கூறுகையில், ‘‘கோயம்பேடு மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் கூலி வேலை செய்து வருகின்றனர். வேலை நேரத்தில் உடல்நிலை பாதிக்கப்படும் தொழிலாளர்கள் நீண்ட தூரம் பயணித்து கீழ்ப்பாக்கம், ராயப்பேட்டை, ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனைகளுக்கு சென்றனர்.
இந்நிலையில், வியாபாரிகள் மற்றும் தொழிலாளிகள் பயன்பெறும் விதமாக அரசு சார்பில் நவீன மருத்துவமனை அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது,’’ என்றனர்.
இதனிடையே, கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தை அழகுபடுத்தும் விதமாக பூ மார்க்கெட் வளாகத்தில் 7 ஏக்கரில் பிரமாண்டமான பூங்கா அமைக்க சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் திட்டமிட்டு அதற்கான பணிகளும் நடந்து வருகிறது. இதில், நடைபயிற்சி பாதை, குழந்தைகள் விளையாடும் இடம், மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள், செடிகள், மரங்கள், இருக்கைகள், செயற்கை நீர் ஊற்று ஆகியவை அமைக்கப்பட உள்ளது.