Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கோயம்பேடு பிடாரி உத்தநாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான நில ஆக்கிரமிப்பு வழக்கு முடித்து வைப்பு..!!

சென்னை: கோயம்பேடு பிடாரி உத்தநாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான நில ஆக்கிரமிப்பு வழக்கு முடித்து வைக்கப்பட்டது. சென்னை, அரும்பாக்கம், அருள்மிகு பிடாரி உத்தநாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான சொத்து கோயம்பேடு, ஜவஹர்லால் நேரு சாலையில் டவுன் சர்வே எண்.6/2, 6/3 -ல் அமைந்துள்ள வணிக கட்டிடங்களை வாடகைக்கு பெற்றிருந்த கே.குமார் (2 கடைகள்) மற்றும் கே.கிருஷ்ணகுமார் ஆகியோர் நீண்ட நாட்களாக வாடகை தொகை செலுத்தாததால் சென்னை மண்டல இணை ஆணையர் நீதிமன்றத்தால் சட்டப்பிரிவு 78-ன் கீழ் மேற்படி நபர்களை ஆக்கிரமிப்பாளர்களாக அறிவித்து வெளியேற்றிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த உத்தரவினை எதிர்த்து மேற்படி நபர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் 12.09.2024 அன்று நடைபெற்ற விசாரணையின் போது நீதியரசர் நிலுவையில் உள்ள வாடகையில் குறிப்பிட்டத் தொகையினை திருக்கோயிலுக்கு செலுத்த உத்தரவிட்டார். அந்த நிலுவைத் தொகையினை செலுத்த மேற்படி நபர்களுக்கு மறுவாய்ப்பு அளித்தும், செலுத்த தவறியதால் நீதிமன்ற உத்தரவின்படி 19.10.2024 அன்று திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது. மேலும், உயர்நீதிமன்ற உத்தரவின்படி அக்கட்டிடத்தினை பொது ஏலம் மூலம் வாடகைக்கு விடுவதற்கு நாளிதழில் விளம்பரம் செய்யப்பட்டது.

இந்நிலையில் மேற்படி ஆக்கிரமிப்பாளர்கள் தனி நீதியரசர் உத்தரவிற்கும், சுவாதீனம் செய்யப்பட்ட சொத்தினை பொது ஏலம் விடுவதற்கும் தடையாணை வேண்டி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நீதிப்பேராணை மேல் முறையீட்டு மனு தலைமை நீதியரசர் தலையிலான அமர்வு முன் நேற்று (26.11.2024) விசாணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு விசாரணையின் முடிவில் மாண்பமை நீதியரசர்கள் நிலுவைத் தொகையில் ரூபாய் ஒரு கோடியினை உடனடியாக திருக்கோயிலுக்குச் செலுத்தினால் மனுதாரர்களின் கோரிக்கை பரிசீலிக்க இயலும் என தெரிவித்தார்கள். மனுதாரர்கள் நீதிமன்றம் தெரிவித்த தொகையினை செலுத்த முன்வராததால் மேற்படி ஆக்கிரமிப்புதாரர்கள் தொடர்ந்த வழக்கினை தள்ளுபடி செய்தும், சொத்தினை பொது ஏலம் மூலம் வாடகைக்கு விடும் நடவடிக்கையினை தொடருமாறு தெரிவித்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.