திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியத்திலடங்கிய கோவளம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு தனியார் பள்ளிகளில் உள்ளது போன்று நவீன வசதிகளுடன் மாணவர்களுக்கு கல்வி போதிக்கப்பட்டு வருகிறது. வெங்கட்ராமன் அறக்கட்டளை, பள்ளி மேலாண்மைக்குழு, கோவளம் ஊராட்சி மன்றம், எஸ்.டி.எஸ்., அறக்கட்டளை ஆகியவற்றின் உதவியுடன் பள்ளி வளாகத்தில் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பில் வகுப்பறைகள் கட்டப்பட்டு உள்ளன.
இதுமட்டும் இன்றி 60 லட்சம் ரூபாய் செலவில் நட்சத்திர ஒட்டலில் இருப்பது போன்ற கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. வகுப்பறைகளில் ஸ்மார்ட் வகுப்பறை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நீண்ட தூரங்களில் இருந்து வரும் மாணவர்களுக்கு என தனி பேருந்து வசதியும் செய்யப்பட்டு மாணவர்கள் பள்ளிக்கு அழைத்து வரப்பட்டு வீடுகளுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றனர்.இந்நிலையில், பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படும் பள்ளிகளை கண்டறிந்து பேராசிரியர் அன்பழகன் விருது வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விருது வழங்கும் விழா வருகிற 6ம் தேதி திருச்சியில் உள்ள தேசியக்கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து இந்த விருதுக்கு கோவளம் அரசினர் மேல்நிலைப்பள்ளியும், ஜமீன் ராயப்பேட்டை அரசு தொடக்கப்பள்ளியும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாடு முழுவதும் இருந்து 76 பள்ளிகள் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.விருது பெறும் பள்ளிகளில் 38 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதி அளிக்கப்படுகிறது. இந்த விருது பட்டியலில் ேகாவளம் அரசு மேல்நிலைப்பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு பொதுமக்களும், பெற்றோரும் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.