கோவை : கோவை உக்கடத்தில் கட்டப்பட்டு வரும் புதிய மேம்பாலத்தின் மீது பாலஸ்தீன கொடியை பறக்கவிட்டவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆளும் ஹமாஸ் படையினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையேயான போர் 20வது நாளை எட்டியது. இதுவரை காசாவில் பலியோனார் எண்ணிக்கை 6,546 ஆக அதிகரித்துள்ளது. இதில் 2,704 குழந்தைகள். 17,439 பேர் காயமடைந்துள்ளனர். போரில் காயமடைந்தவர்கள் கொத்து கொத்தாக மருத்துவமனைக்கு வரும் நிலையில், அங்கு எரிபொருள், மருந்துகள் இல்லாமல் டாக்டர்கள் செய்வதறியாது உள்ளனர். மேலும் காசா மக்களுக்கு குடிநீர், கேஸ், பெட்ரோல், டீசல், மின்சாரம், உணவு பொருள், மருந்து பொருட்கள் அனைத்து இணைப்புகளையும் இஸ்ரேல் துண்டித்துள்ளது. இதனை கண்டித்தும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் என 22 நாடுகளில் மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில், கடந்த 24ம் தேதி பாலஸ்தீனத்திற்கு ஆதவாக கோவை உக்கடம் பகுதியில் இஸ்லாமிய அமைப்புகள், ஜமாத்துகள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் 300க்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக அவர்கள் கோஷங்களை எழுப்பினர். இந்த போராட்டத்தின் போது, உக்கடம் பகுதியில் புதியதாக கட்டப்பட்டு வந்த மேம்பாலத்தில் பாலஸ்தீன கொடியை சிலர் பறக்கவிட்டனர். இது பெரும் சர்ச்சையாக வெடித்ததையடுத்து, கொடியை பறக்கவிட்டவர்கள் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்தது. அத்துடன் போலீஸ் விசாரணையில், ஜமாத்தே இஸ்லாமிக் ஹிந்த் அமைப்பின் மாவட்ட செயலாளர் சபீர் அலி, மனிதநேய ஜனநாயக கட்சியை சேர்ந்த அபுதாகீர், ரபீக் ஆகிய 3 பேர் பாலஸ்தீன கொடியை மேம்பாலத்தின் மீது கட்டியது தெரியவந்தது.இதனை தொடர்ந்து போலீசார் சபீர் அலி, அபுதாகீர், ரபீக் ஆகியோர் மீது சட்டத்திற்கு புறம்பாக ஒன்று கூடுதல் உள்பட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.