*இடத்துக்கு உரிமை கோரியவர் மீது தாக்குதல்
*6 பேர் மீது வழக்குப்பதிவு
காலாப்பட்டு : கோட்டக்குப்பம் அருகே கோர்ட் உத்தரவின்படி நிலத்தை அளக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது அங்கு வந்த இடத்துக்கு உரிமை கோரிய நபர் மீது தாசில்தார் மற்றும் போலீஸ் முன்னிலையில் தாக்குதல் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி அடுத்த கோட்டக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் அனீஸ்.
இவர் கோட்டக்குப்பம் ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் சுப்பரமணியனின் பேரன் ஆவார். இவர், சின்னகோட்டக்குப்பம் பழைய ஆரோவில் பாதை பகுதியில் உள்ள சுமார் 1 ஏக்கர் 36 சென்ட் அளவுள்ள இடத்துக்கு உரிமை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி, நிலத்தை அளவீடு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வானூர் தாசில்தாருக்கு உத்தரவிட்டிருந்தார்.
அதன் அடிப்படையில் நேற்று காலை வானூர் சர்வேயர் அருள்ராஜ், கோட்டக்குப்பம் கிராம நிர்வாக அலுவலர். சரண்யா மற்றும் கிராம நிர்வாக அலுவலர் உதவியாளர் சுந்தர் ஆகியோர் போலீஸ் பாதுகாப்புடன் நிலத்தை அளவீடு செய்ய வந்தனர்.
அப்போது தகவலறிந்து வந்த சின்ன கோட்டக்குப்பம் கிராம பஞ்சாயத்தார்கள் மற்றும் பொதுமக்கள், அதிகாரிகளை தடுத்து நிறுத்தி ஊர் கோயிலுக்கு சொந்தமான நீர்நிலை குட்டை என்பதால் நிலத்தை அளவீடு செய்யக்கூடாது என்று கூறி எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து கோட்டக்குப்பம் சிறப்பு எஸ்ஐ ரமேஷ் தலைமையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து, சின்ன கோட்டக்குப்பம் பஞ்சாயத்தார்கள் நிலத்தை அளக்க எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, தகவலறிந்த வானூர் தாசில்தார் வித்யாதரன், கோட்டக்குப்பம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முத்துலட்சுமி ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது திடீரென இடத்தை உரிமை கோரிய அனிஸ், அங்கு வந்து அதிகாரிகளிடம், இடம் தனக்கு சொந்தமானது என்று கூறினார்.
அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள், போலீசார் மற்றும் வட்டாட்சியர் முன்னிலையில் அனிஸ் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து அனிசை பாதுகாப்பாக வேனில் ஏற்றிக்கொண்டு, காவல்நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
இதுதொடர்பாக கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் அனீஸ் புகார் அளித்தார். அதன்பேரில் பாஸ்கர், தனசெழியன், கணபதி, கார்த்திக், தனுஷ், கவியரசன் ஆகிய 6 பேர் மீது சப்-இன்ஸ்பெக்டர் ராஜி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இச்சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.