Thursday, July 10, 2025
Home ஆன்மிகம் கோதைக்கு அருளிய காத்யாயணி துர்கை

கோதைக்கு அருளிய காத்யாயணி துர்கை

by Porselvi

மனிதனின் சகல விதமான வியாதி, கவலைகள், துக்கங்கள், கஷ்டங்கள் போன்றவற்றை போக்க, துர்கா தேவி வழிபாட்டைப் போல ஒரு அருமருந்து இல்லை என்றே சொல்லலாம். பக்தர்களை அரணாக இருந்து இந்த அம்பிகை காப்பதால்தான், இந்த அம்பிகைக்கு துர்கை என்ற நாமமே ஏற்பட்டது. துர்கம் என்றால் கோட்டை. துர்கை என்றால் கோட்டையை போல மக்களை காப்பவள் என்று பொருள்.

இந்த துர்கா தேவிக்கு, ஒன்பது விதமான ரூபங்கள். சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. அதில் மிகவும் முக்கியமான வடிவம் காத்யாயணி தேவி ஆகும். இந்த காத்யாயணி துர்கை, மார்க்கண்டேய புராணத்தில் தரப்பட்டுள்ள நவ துர்க்கையின் பட்டியலில் ஆறாவதாக இடம் பெற்று உள்ளார். இந்த துர்க்கையின் பெருமையை முடிந்தவரை, இந்தக் கட்டுரையில் காண்போம் வாருங்கள்.

காத்யாயணி துர்கையும் கோபிகைகளும்

ராவணனாலும் உயர்த்த முடியாத சிவ தனுசை அனாயாசமாக உயர்த்தி வளைத்த போது, ராமனின் புஜ பலம் தாங்காமல் அது உடைந்து போனது இல்லையா? இப்படி தேவர்களும் வியக்கும் படி வீர பராக்கிரமம் காட்டிய தீரனை எந்தப் பெண் தான் விரும்ப மாட்டாள். ராமனின் எழில் உருவையும் பராக்கிரமத்தையும் கண்ட மிதிலை வாழ் காரிகைகள், ராமனை கணவனாக அடைய வேண்டி தவம் செய்தார்கள். அவர்கள் செய்த தவப் பயனாக கோகுலத்தில் நவ நந்தர்கள் எனப் படும் ஒன்பதின்மர் வீட்டில் பிறந்து, மார்கழி மாதத்தில், யமுனா நதியின் கரையில் நோன்பு இருந்தார்கள். காத்யாயணி அம்பிகையை வேண்டி நோன்பு இருந்ததன் பலனாக, கண்ணன் இவர்களது ஆடைகளை கவர்த்து லீலை புரிந்ததாக ஸ்ரீமத் பாகவத புராணத்திலும் கர்க சாம்ஹிதையிலும் இருக்கிறது.

நல்ல கணவனை கொடுக்கும் காத்யாயணி தேவியின் வழிபாடு

நல்ல கணவன் வேண்டும் என்று நினைக்கும் கன்னிப் பெண்கள், இந்த அம்பிகையை வணங்கி வழிபட்டால் ஆச்சரியமான பலன்கள் கிடைக்கும். வழிபடும் சமயம், ‘‘காத்யாயணி மகாமாயே மகா யோகீன்ய தீஷ்வரி நந்தகோப சுதம் தேஹி பதிம் மே குரு தே நம:” என்ற ஸ்லோகத்தை ஜபித்து வணங்கினால் கை மேல் பலன் கிடைப்பது கண்கூடு.

காத்யாயன மகரிஷிக்கு மகளாக வளர்ந்தவளே, உலகையே மோகிக்க செய்யும் மகா மாயையே, யோகிகளால் பூஜிக்கப் படும் இறைவியே, நந்த கோபருக்கு மகனாக பிறந்த அந்தக் கண்ணனை போன்ற ஒரு கணவனை அடைய எனக்கு அருள் புரிவாயாக என்பது மேலே நாம் கண்ட ஸ்லோகத்தின் தேர்ந்த பொருளாகும்.

காத்யாயணி துர்கையும் கோதை நாச்சியாரும்

பாகவதத்து கோபிகைகளை தனது முன்னுதாரணமாகக் கொண்ட, ஆண்டாள் நாச்சியார், அவர்களைப்போலவே மார்கழி மாதத்தில் காத்யாயணி துர்க்கையை எண்ணி நோன்பு இருந்ததாக சொல்வார்கள். அப்படி தன்னை வணங்கிய கோதை நாச்சியாருக்கு, நாத்தனாராக முன்னே நின்று திருமணத்தை கண்ணனோடு நடத்தி வைத்ததும் இந்த துர்கை தான். அதை வாரணம் ஆயிரம் பாசுரத்தில் ‘‘மண மாலை அந்தரி சூட்ட கனா கண்டேன் தோழி நான்” என்று ஆண்டாள் கூறுகிறார். அந்தரி என்னும் தமிழ் சொல், மகிஷனை கொன்ற காத்யாயணி துர்க்கையை குறிக்கும்.

சிவ தாண்டவமும் காத்யாயணி துர்கையும்

பதஞ்சலி முனிவருக்கு அருள் செய்வதற்காக, இறைவன் ஆடிய நடனத்துக்கு முனி தாண்டவம் என்று பெயர். இப்படி முனிவர்களுக்காக ஈசன் தாண்டவம் ஆடும் போது, அவரது நெற்றிக் கண்ணில் இருந்து காத்யாயணி துர்கை தோன்றியதாக சைவ ஆகம நூல்கள் சொல்கிறது.

குண்டலினி சக்தியும் காத்யாயணி துர்கையும்

உடலில் இருக்கும் சூட்சுமமான ஏழு ஆதார சக்கரங்களில், ஆறாவதாக இருப்பது ஆக்ஞா சக்ரம். இது நெற்றிப் பொட்டில் இருக்கிறது. இந்த ஆக்ஞா சக்ரம் மனம் என்ற தத்துவத்தை குறிக்கிறது. குண்டலினி யோகம் பயிலும் யோகிகள் இந்த சக்கரத்தை கடக்கும் போது, மனம் பல விதமாக அலை பாயும். அதை இறைவன் அருளால் அடக்கி முன்னேற வேண்டும் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது. இப்படிப் பட்ட ஆக்ஞா சக்கரத்தின் அதி தேவதையாக விளங்குபவள் காத்யாயணி துர்கை.

வேதத்தில் காத்யாயணி துர்கை

இந்த துர்க்கையின் வழிபாடு, அனாதி காலமாக மக்களிடையே பரவலாக இருந்து வருகிறது. யஜுர் வேதத்தில், தைத்ரீய ஆரண்யகத்தில் வரும், துர்கா சூக்தத்தில், துர்கா தேவியை காத்யாயணி என்றே வேதம் அழைக்கிறது. மிகவும் பிரசித்தமான துர்கா காயத்ரி மந்திரமும் காத்யாயணி தேவியை குறிப்பிட்டே ஆரம்பிக்கிறது.

வாமன புராணத்தில் காத்யாயணி துர்கை

வாமன புராணத்தின் படி, மஹிஷாசுரன் என்ற அசுரனின் தீமையை தாங்க முடியாமல் தேவர்கள் திருமாலை சரணடைய, திருமால், சிவன் மற்றும் பிரம்மாவோடு சேர்ந்து, அனைத்து தேவர்களும் தங்கள் சக்தியை ஒளிக்கற்றையாக வெளியிட்டார்கள். அந்த சக்தி கிரணங்களை காத்யாயன மகரிஷி, ஒன்று திரட்டி, தனது பெண்ணாக வளர்த்தார். அவரது பெண்ணாக வளர்ந்த அம்பிகை இறுதியில் மகிஷனை கொள்கிறாள். இப்படி காத்தியாயனார் மகளாக அம்பிகை வளர்ந்ததால் அவளுக்கு காத்யாயணி என்று திருநாமம் ஏற்பட்டது.

காளிகா புராணத்தில் காத்யாயணி துர்கை

மற்றொரு வரலாறு காளிகா புராணத்தில் சொல்லப்படுகிறது. காத்யாயன முனிவர் முதன்முதலாக இந்த அம்பிகையின் மந்திரத்தை உலகுக்கு கொடுத்து, இந்த அம்பிகையை உளமார வழிபட்டதால், இந்த அம்பிகைக்கு ‘‘காத்யாயணி” என்ற பெயர் ஏற்பட்டதாக சொல்கிறது. அஷ்வின மாதத்து கிருஷ்ண பட்ச சதுர்த்தசியில் தோன்றிய இந்த அம்பிகை, சுக்ல பட்ச, சப்தமி, அஷ்டமி, நவமி மூன்று நாட்களிலும் மகரிஷி காத்யாயனரால் வழிபடப்பட்டு, பத்தாவது நாள் மகிஷனை கொன்றதாகவும் ஒரு வரலாறு இருக்கிறது.

காத்யாயணி துர்க்கையின் தோற்றம்

இந்த தேவியின் தோற்றம் மிகவும் அற்புதமானது மற்றும் தெய்வீகமானது. இந்த தேவியின் நிறம் தங்கத்தைப் போல பிரகாசமாகவும் ஒளிருவதாகும். உலகை ஆளும் இந்த தேவிக்கு நான்கு கரங்கள் உள்ளன. வலதுபுறம் அன்னையின் மேல் கரம் அபயமுத்திரையையும், கீழ் கரம் வரமுத்திரையையும் காட்டுகிறது. மேல் இடது கையில் வாளும், கீழ் கையில் தாமரை மலரும் தாங்கி பக்தர்களுக்கு அருள் புரிகிறாள் இந்த தேவி. இந்த தேவியின் வாகனமாக கருதப்படுவது சிங்கம்.

‘‘சந்திர ஹாசோஜ்வல கரா
சார்தூல வர வாஹனா
காத்யாயணி சுபம் தத்யா
தேவி தானவ காதினி”
என்ற ஸ்லோகம் சொல்லி அம்பிகையை வழிபட்டால் மேலான வரங்கள் பெறலாம்.

சந்திரஹாசம் என்ற வாளை கையில் தரித்தவளும், அசுரர்களை அழித்தவளும், சிம்ம வாகனத்தில் ஆரோக்கணித்து வருபவளுமான காத்யாயணி தேவி, எனக்கு அனைத்து விதமான சுகங்களையும் தரவேண்டும், என்பது மேலே நாம் கண்ட ஸ்லோகத்தின் தேர்ந்த பொருளாகும்.

நவராத்திரியும் காத்யாயணி வழிபாடும்

நவராத்திரி துர்கா பூஜையின் ஆறாவது நாளில், இந்த அம்பிகை வழிபடப்படுகிறாள். இந்த அம்பிகையை வணங்குபவர், ஆக்ஞா சக்கரத்தில் மனதை நிலைநிறுத்தி, காத்யாயணி அம்பிகையின் பாதத்தில் தன் உடைமைகள் அனைத்தையும் சமர்ப்பித்து பூரண சரணாகதி அடைகிறான். அப்படி எந்த பக்தன், பரிபூரணமாக அம்பிகையை சரண் அடைகிறானோ அவன் ஆக்ஞா அம்பிகையின் தரிசனத்தை எளிதில் அடைகிறான்.

இந்த அம்பிகையை பக்தியோடு வழிபட்டால், அந்த மனிதன், அறம் பொருள் இன்பம் மற்றும் முக்தி ஆகிய நான்கு பலன்களை எளிதில் அடைகிறான். இவ்வுலகில் இருக்கும் போதே அவன், இயற்கைக்கு அப்பாற்பட்ட சிறப்பையும் செல்வாக்கையும் உடையவராகிறான். அவனுடைய வியாதிகள், துக்கங்கள், பயங்கள் முதலியவை முற்றிலுமாக அழிக்கப்படுகின்றன. ஆகவே இந்த அம்பிகையை வழிபடுவதை விட பிறப்பு மற்றும் இறப்பு என்ற சம்சாரக்கடலை அழிக்க எளிதான வேறு ஒரு எளிமையான வழி இல்லை. தன்னை வழிபடுபவர்கள் இடத்தில், இந்த அம்பிகை எப்போதும் நிலைத்திருப்பதால் அந்த சாதகன், உயர்ந்த நிலையை உடையவராகிறான். பெருமைகள் மிக்க காத்யாயணி தேவியை நாமும் பூஜித்து பெறுதற்கரிய பேறு பெறுவோம்.

ஜி.மகேஷ்

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi