*சுற்றுலா துறை அமைச்சர் திறந்து வைத்தார்
கோத்தகிரி : கோத்தகிரி சிறப்பு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பேரூராட்சி துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை தமிழ்நாடு சுற்றுலா துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டார்.நீலகிரி மாவட்டம், கோத்தகிரி திம்பட்டி பகுதியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி தொடக்கப்பள்ளி கட்டிடத்தை சுற்றுலா துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் திறந்து வைத்தார். தொடர்ந்தவர் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமயலறையினை பார்வையிட்டார்.
அதன்பின், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் நடுஹட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கடக்கோடு கிராமத்தை சேர்ந்த 35 விவசாயிகளுக்கு பழ நாற்று தொகுப்புகளை வழங்கினார். இதைத்தொடர்ந்து கோத்தகிரி சிறப்பு நிலை பேரூராட்சி பகுதியில் 2022-2023 அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.42.69 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் குடிநீர் விநியோகம் முறையை சீரமைத்தல் பணியினையும், 2022-2023 நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.96.20 லட்சம் மதிப்பீட்டில் கார்சிலி முதல் குண்டாட ஜங்ஷன் சாலை வரை தார்ச்சாலை மேம்படுத்துதல் பணிகளையும் ஆய்வு செய்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் மேல் அனையட்டி பகுதியில் கட்டப்பட்டு வரும் சமுதாய கூடம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் தாந்தநாடு ஒசஹட்டி பகுதியில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பல்நோக்கு கட்டிட பணியினையும் என மொத்தம் சுமார் ரூ.44 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.
பணிகளை விரைவாகவும், தரமாகவும் கட்டி விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இது குறித்து அமைச்சர் ராமசந்திரன் கூறியதாவது:தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை தீட்டி சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறார். மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்யும் வகையில் முன்னுரிமை அளித்துள்ளார். அவர் அறிவுறுத்தியதை தொடர்ந்து அனைத்து பள்ளிகளுக்கும் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, பள்ளி கல்வித் துறை சார்பில் அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கத்தில் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு சீருடை, காலணி, விலையில்லா மடிக்கணினி, புத்தகம் விலையில்லா மிதிவண்டி போன்ற அனைத்தும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பள்ளிகளில் தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று தமிழக அரசு மூலம் நடைபெற்று வரும் அனைத்து வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்யப்பட்டு விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின்போது குன்னூர் கோட்டாட்சியர் பூஷனகுமார், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் இப்ராஹிம் ஷா, கோத்தகிரி செயல் அலுவலர் சதாசிவம், கோத்தகிரி வட்டாட்சியர் கோமதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜனார்த்தனன், அனிதா, கோத்தகிரி பேரூராட்சி தலைவர் ஜெயக்குமாரி, துணை தலைவர் உமாநாத், கோத்தகிரி ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணன், தலைமை செயற்குழு உறுப்பினர் எக்ஸ்போ செந்தில், மாவட்ட பிரதிநிதி போஜன், பொதுக்குழு உறுப்பினர் வீரபத்திரன், ராஜூ மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.