*குடும்ப அட்டைதாரர்கள் அதிர்ச்சி
கோத்தகிரி : கோத்தகிரி அருகே அம்பேத்கர் நகர் நியாய விலைக் கடையில் வழங்கப்படும் ரேஷன் அரிசியில் கற்கள் மற்றும் எலியின் கழிவுகள் இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளதுடன் தரமான அரிசி வழங்க வேண்டும் எனக்கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள அம்பேத்கர் நகரில் அரசு நியாய விலைக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் அம்பேத்கர் நகர், பாக்கிய நகர், அண்ணா நகர் மற்றும் கார்ஸ்வுட் கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான குடும்ப அட்டைத்தாரர்கள் மாதந்தோறும் அத்தியாவசிய பொருட்களை வாங்கி பயனடைந்து வருகின்றனர்.
இந்த கடையில் நேற்று முன்தினம் அம்பேத்கர் நகரை சேர்ந்த பொதுமக்கள் ரேஷன் அரிசி, பாமாயில், பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை வாங்கியுள்ளனர். அப்போது அரிசியில் கற்கள் மற்றும் எலிப் புழுக்கைகள் இருந்தை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் பாமாயில் பாக்கெட்டுகள் எலி கடித்து ஆயில் சிந்திக்கொண்டு இருந்ததாக தெரிகிறது.
இது குறித்து பொதுமக்கள், கடை விற்பனையாளரிடம் கேட்டபோது, ‘‘நான் இன்று (நேற்று) தான் இந்த கடைக்கு புதிதாக பணிக்கு நியமிக்கப்பட்டேன். இருப்பில் உள்ள பொருள்களை தான் விநியோகம் செய்தேன்’’ என்று தெரிவித்துள்ளதாக தெரிகிறது.
இதனை தொடர்ந்து ரேஷன் ஊழியர், பொதுமக்களிடம் இருந்து அரிசியை திருப்பபெற்று கொண்டு மீண்டும் தூய்மை அரிசியை வழங்கினார்.பொதுமக்கள் கூறுகையில், ‘நியாய விலைக் கடையில் தரமான அரிசியை வழங்க வேண்டும். கூலித் தொழிலாளர்களான தங்களால், பொருட்கள் வரும் தேதியில் வந்து அனைத்துப் பொருட்களையும் வாங்கிச் செல்ல முடியாது.
எனவே இருப்பு தீர்ந்து விட்டது எனக் கூறாமல், அத்தியாவசிய பொருட்களை மாதம் முழுவதும் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்துள்ளனர்.