*அமைதி பேச்சுவார்த்தை நடத்த முடிவு
நீடாமங்கலம் : கொரடாச்சேரி அருகே அய்யனார் கோயில் நிர்வாகத்தில் பங்கு கேட்டு ஒரு தரப்பினர் கோயிலை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
கொரடாச்சேரி அருகே முசிறியம் ஊராட்சி திட்டாணிமுட்டம் கிராமத்தில் கூத்தையனார் கோயில் உள்ளது. இந்தக் கோயிலை கடந்த 40 வருடங்களுக்கு மேல் ஒரு தரப்பினர் பராமரித்து நிர்வாகம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், இந்த கோயிலில் அனைத்து தரப்பினரும் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு வழிபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் மற்றொரு தரப்பினர் எங்களுக்கும் கோயில் நிர்வாகத்தில் அனுமதி தர வேண்டும், கோயில் விழாவிற்கும் பராமரிப்பு சம்பந்தமான அனைத்து செலவினங்களுக்கும் நாங்களும் தேவையான தொகையினை தருகின்றோம் எனவும், அனைத்து விழாக்களையும் சேர்ந்தே நடத்துவோம் எனவும் கூறியுள்ளனர்.இதற்கு கடந்த பல ஆண்டுகளாக நாங்கள் மட்டுமே நிர்வகித்து வரும் இந்த கோவிலில், யார்வேண்டுமானாலும் வந்து சாமி கும்பிடலாம். ஆனால் நிர்வாகத்தில் பங்கு கேட்கக் கூடாது.
தரமாட்டோம் என ஒரு தரப்பினர் கூறியுள்ளனர். இது தொடர்பாக மாவட்ட கலெக்டரிடமும் தாசில்தாரிடமும் கடந்த சில வருடங்களாக மனு கொடுத்தும் அமைதி பேச்சுவர்த்தை நடத்தியும் எந்த சுமூக உடன்படிக்கையும் ஏற்படவில்லை என கூறிவந்தனர்.
இந்நிலையில் வைகாசி விசாக நட்சத்திர நாளான நேற்று இந்த கோவிலில் பால்குட அபிஷேகம் நடத்துவதாக, நிர்வாக அனுமதி மறுக்கும் தரப்பினர் முடிவு செய்தனர். இது தொடர்பாக தகவல் அறிந்த நூற்றுக்கும் மேற்பட்ட மற்றொரு தரப்பினர் காலையிலேயே கோவிலுக்கு முன்பு வந்து அமர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தினர்.
இதனால் இன்று நடைபெறவிருந்த பால்குட அபிஷேக விழா தடைப்பட்டது என கூறப்படுகிறது.இச்சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த கொரடாச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் போலீசார் கோயில் பகுதியில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மேலும் கூத்தாநல்லூர் தாசில்தார் வசுமதி மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இரு தரப்பினரிடம் அமைதி பேச்சு வார்த்தை நடத்தினார் பேச்சுவார்த்தை முடிவுக்கு வராததால் வரும் 12ஆம் தேதி ஆர்டிஓ தலைமையில் மன்னார்குடியில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெறும் என கூறியதன் பேரில் கோயிலை முற்றுகையிட்ட ஒரு பிரிவினர் கலைந்து சென்றனர். இதனால் திட்டாணிமுட்டம் பகுதியில் பதற்றம் நிலவியது.